கடைசி ஆட்டத்திலும் இந்தியா வெற்றி:ஜிம்பாப்வே “ஒயிட் வாஷ்’

CRICKET-ZIM-IND

ஜிம்பாப்வேக்கு எதிரான 3-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தியா.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் இரு ஆட்டங்களிலும் வென்றிருந்த இந்திய அணி, கடைசி ஆட்டத்திலும் வென்றதன் மூலம் ஜிம்பாப்வேயை “ஒயிட் வாஷ்’ ஆக்கியுள்ளது.

ஜிம்பாப்வே அணி தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவிடம் “ஒயிட் வாஷ்’ ஆகியுள்ளது. முன்னதாக 2013, 2015 ஆகிய ஆண்டுகளிலும் அந்த அணி “ஒயிட் வாஷ்’ ஆகியுள்ளது.

ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் புதன்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணியில் நிறைய மாற்றங்கள் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. கருண் நாயருக்குப் பதிலாக ஃபெய்ஸ் ஃபாஸல் சேர்க்கப்பட்டார்.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஜிம்பாப்வே அணியில் தொடக்க வீரர் மஸகட்ஸா 8 ரன்களில் நடையைக் கட்ட, சிபாபாவுடன் இணைந்தார் சிபான்டா. இந்த ஜோடியும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. சிபாபா 27 ரன்களில் வெளியேற, மருமா களம்புகுந்தார்.

ஜிம்பாப்வே 89 ரன்களை எட்டியபோது 3-ஆவது விக்கெட்டை இழந்தது. ஆமை வேகத்தில் ஆடிய சிபான்டா 71 பந்துகளில் 38 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்க, ஜிம்பாப்வேயின் சரிவு தவிர்க்க முடியாததானது.

மருமா 17 ரன்களில் வெளியேற, பின்னர் வந்தவர்கள் சொற்ப ரன்களில் நடையைக் கட்ட, 42.2 ஓவர்களில் 123 ரன்களுக்கு சுருண்டது ஜிம்பாப்வே. அந்த அணி கடைசி 8 விக்கெட்டுகளை 34 ரன்களுக்கு இழந்தது.

இந்தியத் தரப்பில் ஜஸ்பிரித் பூம்ரா 4 விக்கெட்டுகளையும், யுவேந்திர சாஹல் 2 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.

இந்தியா வெற்றி:

பின்னர் பேட் செய்த இந்திய அணியில் லோகேஷ் ராகுலும், அறிமுக வீரரான ஃபாஸலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இந்த ஜோடியின் அசத்தல் ஆட்டத்தால் இந்தியாவின் வெற்றி மிக எளிதானது. ராகுல், ஃபாஸல் ஆகியோர் தலா 58 பந்துகளில் அரை சதமடிக்க, இந்தியா 21.5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 126 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ராகுல் 70 பந்துகளில் 2 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 63, ஃபாஸல் 61 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

பூம்ரா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தொடரில் ஒரு சதம், ஒரு அரை சதத்துடன் 196 ரன்கள் குவித்த லோகேஷ் ராகுல் தொடர்நாயகன் விருதைத் தட்டிச் சென்றார்.

3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற இந்திய அணி, அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஜிம்பாப்வேயுடன் விளையாடுகிறது. இந்தத் தொடர் வரும் சனிக்கிழமை தொடங்குகிறது.

தோனி 350

இந்த ஆட்டத்தில் ஜஸ்பிரித் பூம்ரா வீசிய 33-ஆவது ஓவரில் ஜிம்பாப்வேயின் எல்டான் சிகும்பராவை கேட்ச் செய்தார் இந்திய கேப்டன் தோனி. இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் 350 பேரை ஆட்டமிழக்கச் செய்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் என்ற பெருமையைப் பெற்றார். அவர் தனது 278-ஆவது ஆட்டத்தில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதில் 261 கேட்சுகளும், 89 ஸ்டெம்பிங்குகளும் அடங்கும்.

சர்வதேச அளவில் இந்த மைல்கல்லை எட்டிய 4-ஆவது விக்கெட் கீப்பர் தோனி ஆவார். இலங்கையின் குமார் சங்ககாரா (482) முதலிடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆடம் கில்கிறிஸ்ட் (472) 2-ஆவது இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் மார்க் பவுச்சர் (424) 3-ஆவது இடத்திலும் உள்ளனர்.

கேப்டனாக சாதனை:

தோனி தலைமையிலான இந்திய அணி இதுவரை 107 ஒரு நாள் ஆட்டங்களில் வாகை சூடியுள்ளது. இதன்மூலம் ஒரு நாள் போட்டியில் அதிக வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன்களின் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ஆலன் பார்டருடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார் தோனி. ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் 165 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top