தமிழகக் கோரிக்கைகள்:பிரதமருக்கு முதல்வர் தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும்

தமிழகத்தின் கோரிக்கைகள் நிறைவேற பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் தர வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

பிரதமர் நரேந்திர மோடியிடம் ஏற்கெனவே கொடுத்த மனுக்களைத்தான் இந்த முறையும் முதல்வர் ஜெயலலிதா கொடுத்துள்ளார்.

பிரதமரை முதல்வர் ஜெயலலிதா செவ்வாய்க்கிழமை (ஜூன் 14) சந்தித்து 29 கோரிக்கைகள் அடங்கிய மனுவைக் கொடுத்து விட்டு சென்னை திரும்பியுள்ளார்.

2014-ஆம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி அமைந்தபோது, முதல்வர் ஜெயலலிதா தில்லிக்குச் சென்று 31 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்ததுடன், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியையும், மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லியையும் சந்தித்து விட்டு சென்னை திரும்பினார்.

இதற்கிடையில் 2015-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னைக்கு வந்த பிரதமர் மோடி, ஜெயலலிதாவை அவருடைய இல்லத்தில் சென்று சந்தித்தபோதும், தமிழகத்தின் தேவைக்கான 19 கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தார்.

ஆனால், அந்தக் கோரிக்கை மனுக்களில் உள்ள தேவைகளைப் பார்த்தால், பெரும்பாலானவை ஒரே மாதிரியான கோரிக்கைகள்தான் திரும்பத் திரும்பப் பிரதமரிடம் எடுத்து வைக்கப்பட்டுள்ளன.

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நதிநீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை உடனடியாக அமைக்க வேண்டும் என்பது முதல் கோரிக்கையாகும்.

அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்பட பல திட்டங்கள் ஏற்கெனவே வலியுறுத்தியவைதான்.

தொடர்ந்து அழுத்தம் தேவை: பிரதமரிடம் கோரிக்கைகளைக் கொடுத்தால், தொடர்ந்து தொடர்புடைய அமைச்சர்கள், மத்திய நிதியமைச்சர் ஆகியோரைச் சந்தித்து அந்தக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய அவசர அவசியத்தை உணர்த்திட அரசியல் ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் அழுத்தம் தர வேண்டும்.

தமிழகத்தில் உள்ள தொடர்புடைய அமைச்சர்கள் தில்லிக்குச் சென்று, அந்தத் துறை அமைச்சரையும், அதிகாரிகளையும் சந்தித்து கோரிக்கைகள் பற்றிப் பேசி அவற்றை நிறைவேற்றுவதற்கான வழிமுறைகளைக் கையாள்வது வழக்கம் என்று கருணாநிதி கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top