இன்று கூடுகிறது தமிழக சட்டப்பேரவை : ஆளுநர் உரை

tn govt

தமிழக சட்டப் பேரவை இன்று வியாழக்கிழமை (ஜூன் 16) கூடுகிறது. 15-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் என்பதால், ஆளுநர் உரையுடன் பேரவை தொடங்குகிறது.

ஆளுநர் உரையில் தமிழக அரசு ஏற்கெனவே செயல்படுத்தி வரும் திட்டங்களின் நிலைகள் குறித்தும், புதிய திட்டங்கள் பற்றிய அறிவிப்புகளும் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

15-ஆவது சட்டப் பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் அதிமுக வெற்றி பெற்று முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மீண்டும் ஆட்சி அமைந்துள்ளது. சட்டப் பேரவையின் முதல் கூட்டம், கடந்த மாதம் 25-ஆம் தேதியன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 232 தொகுதிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள், எம்.எல்.ஏ.க்களாக பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, கடந்த 3-ஆம் தேதியன்று நடந்த பேரவைக் கூட்டத்தில் பேரவைத் தலைவராக தனபாலும், துணைத் தலைவராக பொள்ளாச்சி வி.ஜெயராமனும் தேர்வு செய்யப்பட்டனர். இதன் பிறகு, சட்டப் பேரவைக் கூட்டம் ஜூன் 16-ஆம் தேதியன்று நடைபெறும் என பேரவைத் தலைவர் தனபால் அறிவித்தார்.

ஆளுநர் உரை:

பேரவைத் தலைவரின் அறிவிப்புப்படி, சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் கே.ரோசய்யா வியாழக்கிழமை (ஜூன் 16) உரை நிகழ்த்துகிறார். சட்டப் பேரவை மண்டபத்தில் காலை 11 மணிக்கு ஆளுநர் ரோசய்யா உரையாற்ற இருப்பதாக பேரவைச் செயலாளர் ஏ.எம்.பி.ஜமாலுதீன் ஏற்கெனவே அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பின்படி பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறுகிறது.

4 நாள்கள் நடைபெறும்:

சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் ஆளுநர் உரையைத் தொடர்ந்து, வியாழக்கிழமை பிற்பகலில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெறும். இதில் பேரவைக் கூட்டத் தொடரை எத்தனை நாள்களுக்கு நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.

மூன்று அல்லது நான்கு நாள்களுக்கு பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத் தொடரின் போது, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு அதன் மீது விவாதமும், வாக்கெடுப்பும் நடைபெறும். இந்த விவாதத்தில் ஆளும்-எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் உரையாற்றுவர். இந்த விவாதங்களுக்கு தமிழக அரசு சார்பில் அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் பதிலளிப்பார்.

பிரதான எதிர்க்கட்சி:

89 உறுப்பினர்களுடன் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்துடன், திமுக பேரவையில் அங்கம் வகிக்கிறது.

இதற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 8 உறுப்பினர்களையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஒரு உறுப்பினரையும் கொண்டுள்ளன.

எதிர்க்கட்சிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள திமுக, பல்வேறு முக்கிய பிரச்னைகளை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், அரசுத் தரப்பிலும் அந்த விவாதங்களுக்கு பதிலளிக்க அமைச்சர்கள் தயாராகி வருகின்றனர். இதனால், பேரவை கூட்டத் தொடர் விவாதங்கள் காரசாரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top