ஐரோப்பிய கால்பந்து போட்டி: சுலோவக்கியாவிடம் வீழ்ந்தது ரஷியா போர்ச்சுகல்–ஐஸ்லாந்து ஆட்டம் டிரா

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் ரஷிய அணி சுலோவக்கியாவிடம் போராடி தோல்வி அடைந்தது. மற்றொரு ஆட்டத்தில் போர்ச்சுகலுக்கு ‘தண்ணி’ காட்டிய ஐஸ்லாந்து டிரா கண்டது.

15–வது ஐரோப்பிய கால்பந்து போட்டி (யூரோ) பிரான்ஸ் நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன. லீக் முடிவில் 16 அணிகள் 2–வது சுற்றுக்கு தகுதி பெறும்.

இந்த நிலையில் செயின்ட் எடினோ நகரில் நேற்று முன்தினம் இரவு அரங்கேறிய ‘எப்’ பிரிவில் போர்ச்சுகலும், ஐஸ்லாந்தும் மோதின. குட்டி அணியான ஐஸ்லாந்துக்கு எதிராக வலுவான போர்ச்சுகல் கோல் மழை பொழியும் என்று எதிர்பார்த்த அந்த நாட்டு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. 31–வது நிமிடத்தில் போர்ச்சுகல் வீரர் நானி கோல் அடிக்க, 50–வது நிமிடத்தில் ஐஸ்லாந்து வீரர் பிர்கிர் பஜர்னாசன் பதில் கோல் திருப்பினார்.

போர்ச்சுகல் அணிக்காக அதிக சர்வதேச போட்டிகளில் கலந்து கொண்ட லூயிஸ் பிகோவின் (127–வது ஆட்டம்) சாதனை சமன் செய்த பெருமையுடன் களத்தில் உற்சாகமாக வலம் வந்த நட்சத்திர வீரர் கிறிஸ்டியானா ரொ£னால்டோ பல முறை கோல் போட முயன்றும் பலன் கிட்டவில்லை. முடிவில் இந்த ஆட்டம் 1–1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது. ஐஸ்லாந்து, வெறும் 3 லட்சத்து 30 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட தீவு என்பது குறிப்பிடத்தக்கது. அந்த அணியின் பயிற்சியாளர் ஹெய்மிர் ஹால்கிம்சன் கூறுகையில், ‘எங்களது தடுப்பு ஆட்டமும், ஒருங்கிணைப்பும் அபாரமாக இருந்தது. போர்ச்சுகலுக்கு எதிராக டிரா செய்ததே வெற்றி போன்று உணர்கிறோம்’ என்றார்.

போர்ச்சுகல் கேப்டன் கிறிஸ்டியானோ ரொனால்டோ கூறும் போது, ‘ஐஸ்லாந்து வீரர்கள் வெறுமனே தடுப்பாட்டத்தில் மட்டுமே ஈடுபட்டனர். தற்காப்பு மட்டுமே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது. மற்றபடி வெற்றிக்கான முயற்சி எதுவும் செய்யவில்லை. அவர்கள் ஆடிய விதம் உண்மையிலேயே நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. இந்த தொடரில் தாக்கத்தை ஏற்படுத்தும் நினைப்பு இல்லாமல் குறுகிய மனப்போக்குடன் ஆடினர் என்பதே எனது கருத்து’ என்றார்.

முன்னதாக நடந்த மற்றொரு ஆட்டத்தில் ஹங்கேரி அணி 2–0 என்ற கோல் கணக்கில் ஆஸ்திரியாவை தோற்கடித்தது. ஹங்கேரி அணியில் ஆடம் ஸ்ஜாலை (62–வது நிமிடம்), மாற்று வீரர் ஜோல்டான் ஸ்டீபர் (87–வது நிமிடம்) கோல் போட்டனர். இந்த ஆட்டத்தில் 40 வயதான ஹங்கேரி கோல் கீப்பர் காபோர் கிராலி ஆடியதன் மூலம் ஐரோப்பிய கால்பந்து வரலாற்றில் அதிக வயதில் பங்கேற்றவர் என்ற சிறப்பை பெற்றார். பெரிய தொடரில் கடந்த 30 ஆண்டுகளில் ஹங்கேரி பெற்ற முதல் வெற்றி இதுவாகும்.

 

‘பி’ பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ரஷியாவும், சுலோவக்கியாவும் கோதாவில் குதித்தன. முதல் வினாடியில் இருந்தே இரு அணி வீரர்களும் ஆக்ரோஷமாக ஆடியதால் ஆட்டம் பரபரப்பாக நகர்ந்தது. 32–வது நிமிடத்தில் சுலோவக்கியா வீரர் விளாடிமிர் வெஸ்சும், 45–வது நிமிடத்தில் மாரெக் ஹாம்சிக்கும் கோல் போட்டு ரஷியாவுக்கு அதிர்ச்சி அளித்தனர். பதிலடி கொடுக்க போராடிய ரஷியாவுக்கு 80–வது நிமிடத்தில் மாற்று வீரர் டெனிஷ் குலுஷகோவ் ஆறுதல் தந்தார். சக வீரர் தட்டிக்கொடுத்த பந்தை அவர் தலையால் முட்டி கோலுக்குள் அனுப்பினார். இறுதி கட்டத்தில் சமன் செய்ய ரஷிய வீரர்கள் மேலும் தீவிரம் காட்டிய போதிலும் கிடைத்த சில வாய்ப்புகள் வீண் ஆனதால் தோல்வியை தவிர்க்க முடியாமல் போய் விட்டது.

முடிவில் சுலோவக்கியா அணி 2–1 என்ற கோல் கணக்கில் ரஷியாவை வீழ்த்தியது. தனிநாடாக பிரிந்த பிறகு ஐரோப்பிய கால்பந்து போட்டியில் சுலோவக்கியா ருசித்த முதல் வெற்றி இதுவாகும். தொடக்க ஆட்டத்தில் வேல்ஸ் அணியிடம் தோற்று இருந்தது. அதே சமயம் தனது முதல் லீக்கில் இங்கிலாந்துடன் ‘டிரா’ செய்திருந்த ரஷியாவுக்கு இது முதலாவது அடியாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top