மேட்டூர் அணை திறக்கப்படவில்லை; தென்மேற்கு பருவமழையை நம்பியிருக்கும் டெல்டா பாசன விவசாயிகள்!

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் கவலையடைந்து உள்ள விவசாயிகள் தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா? என எதிர்பார்த்துள்ளனர்.

pmlllமேட்டூர் அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பது வழக்கம். அணையின் நீர் இருப்பை பொறுத்து ஜூன் 12-ந்தேதிக்கு முன்னதாகவோ அல்லது காலதாமதமாகவோ தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.

இதன்மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம், பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் உள்பட 12 மாவட்டங்களில் காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும். குறுவை, சம்பா, தாளடி ஆகிய முப்போக விளைச்சலைக் கொடுக்கும் டெல்டா பாசனத்துக்காக ஆண்டுதோறும் ஜூன் 12-ந்தேதி முதல் ஜனவரி மாதம் வரை சுமார் 300 டி.எம்.சி. தண்ணீர் தேவைப்படும்.

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட வேண்டுமெனில், அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடியாக இருக்க வேண்டும். ஆனால், தற்போது அணையில் போதுமான தண்ணீர் இல்லை. அதே நேரத்தில் பருவமழை தீவிரமடையும் என்ற நிலை இருந்தால் மட்டுமே பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படும்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்திற்கு தென்மேற்கு பருவமழை கை கொடுக்கவில்லை. இதன் காரணமாக கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரை பொறுத்தே தமிழகத்தில் விவசாய பணிகள் நடைபெற்று வருகின்றன.

கடந்த 4 ஆண்டுகளாக குறித்த நேரத்தில், அதாவது ஜூன் 12-ந்தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. தொடர்ந்து 5-வது ஆண்டாக இந்த ஆண்டும் ஜூன் 12-ந்தேதியான நேற்று டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

அணை கட்டப்பட்டு 82 ஆண்டுகள் ஆகிய நிலையில் 57-வது ஆண்டாக இந்த ஆண்டும் டெல்டா பாசனத்துக்கு மேட்டூர் அணையில் இருந்து காலதாமதமாக தண்ணீர் திறக்கப்பட உள்ளது. தற்போதைய நிலவரப்படி கர்நாடக அணைகளிலும் தண்ணீர் இருப்பு திருப்திகரமாக இல்லை என்று தெரியவருகிறது. ஆகவே, தமிழகத்தை பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை கைகொடுத்தால் மட்டுமே பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படாததால், டெல்டா விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர். மேலும் அவர்கள், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தென்மேற்கு பருவமழை கைகொடுக்குமா? என்று எதிர்பார்த்து உள்ளார்கள்.

நேற்றைய நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 43.79 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 100 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,200 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தொடர்ந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து கொண்டே வருகிறது. இதனால் வலதுகரை பகுதி மண் திட்டுகளாகவும், கற்களாகவும் காணப்படுவதுடன் மேட்டூர் அணை குட்டைபோல் காட்சியளிக்கிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top