ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வை தமிழில் நடத்தக்கோரி வழக்கு மத்திய அரசு பரிசீலிக்கவேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவு

10VBG_HIGH_COURT_305863f

சென்னை ஐகோர்ட்டில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:–

மத்திய அரசு கல்வி நிறுவனங்களின் பயிற்று மொழி ஆங்கிலமாக இருந்தாலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு வடமாநிலங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்படுகிறது. ஆனால், இந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு தமிழகத்தில் தமிழில் நடத்தப்படுவதில்லை. அந்தந்த மாநில மொழிகளில் இந்த நுழைவுத்தேர்வு நடத்தவேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு 2012–ம் ஆண்டு முதல் பல கோரிக்கை மனுக்கள் கொடுத்தும், இதுவரை பரிசீலிக்கப்படவில்லை. எனவே, ஐ.ஐ.டி. உள்ளிட்ட உயர் படிப்புகளுக்கான நுழைத்தேர்வுகளை ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் அந்தந்த மாநில மொழிகளில் நடத்த மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர், ‘உயர் கல்விக்கு நடத்தப்படும் நுழைவுத்தேர்வை தமிழிலும் நடத்தவேண்டும் என்று மனுதாரர் 2012–ம் ஆண்டே கோரிக்கை மனு கொடுத்துள்ளார். ஆனால் அவரது கோரிக்கை இதுவரை பரிசீலிக்கப்படாமல் உள்ளது. எனவே அவரது கோரிக்கை மனுவை, மத்திய அரசு 3 மாதங்களுக்குள் பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும்’ என்று கூறியுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top