மல்லையாவின் ரூ.1,411 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு சொந்தமான ரூ.1,411 கோடி மதிப்புடைய சொத்துகளை அமலாக்கத் துறை சனிக்கிழமை முடக்கியது.

ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடி கடன் வாங்கிக் கொண்டு திரும்பச் செலுத்தாதது தொடர்பான வழக்கில், அமலாக்கத் துறை இந்நடவடிக்கையை எடுத்துள்ளது.

இதுகுறித்து மும்பையில் உள்ள அமலாக்கத் துறை அலுவலக மூத்த அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் சனிக்கிழமை கூறுகையில், “விஜய் மல்லையா மற்றும் யுனைடெட் ப்ரூவரீஸ் (யு.பி.) நிறுவனத்துக்கு சொந்தமான நேரிடையான மற்றும் மறைமுகமான ரூ.1,411 கோடி மதிப்புடைய சொத்துகளை முடக்கியுள்ளோம். கருப்புப்பண தடுப்புச் சட்டத்தின்கீழ் இந்த நடவடிக்கைகளை அமலாக்கத் துறை எடுத்துள்ளது. இதுதவிர, விஜய் மல்லையாவின் பெயரில் இருக்கும் ரூ.4,000 கோடி மதிப்புடைய தனிப்பட்ட சொத்துகளை முடக்குவதற்கு நீதிமன்றத்தை அணுகவும் அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது’ என்றார்.

அதன்படி, பெங்களூரு வங்கியில் இருந்த ரூ.34 கோடி முதலீடு முடக்கப்பட்டுள்ளது. பெங்களூரு, மும்பையில் முறையே 2,291 சதுர அடி மற்றும் 1,300 சதுர அடி பரப்பளவில் இருக்கும் தலா ஒரு வீடு, சென்னையில் இருக்கும் 4.5 ஏக்கர் வணிகமனை ஆகியவை முடக்கப்பட்டுள்ளன.

இதேபோல், கூர்க்கில் இருக்கும் 28.75 ஏக்கர் பரப்பளவிலான காபித் தோட்டம், பெங்களூரில் யூ.பி. சிட்டி பகுதியில் இருக்கும் கட்டடங்கள், சுமார் 84 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட கிங் ஃபிஷர் டவர் ஆகியவையும் அமலாக்கத் துறையால் முடக்கப்பட்டுள்ளன.

ஐடிபிஐ வங்கியிடம் இருந்து ரூ.900 கோடி கடன் பெற்றுக் கொண்டு, அதை விஜய் மல்லையா திருப்பிச் செலுத்தவில்லை. இதேபோல், பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட சில வங்கிகளிடம் இருந்து ரூ.9,000 கோடிக்கும் அதிகமாக கடன் வாங்கிக் கொண்டு அவற்றையும் மல்லையா திருப்பி அளிக்கவில்லை.

இதுதொடர்பாக ஐடிபிஐ வங்கியிடம் இருந்து தெரிவிக்கப்பட்ட புகாரையடுத்து, விஜய் மல்லையா உள்ளிட்டோர் மீது சிபிஐ முதலில் வழக்குப்பதிவு செய்தது. இதை அடிப்படையாகக் கொண்டு, மல்லையா உள்ளிட்டோருக்கு எதிராக கருப்புப்பணத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையும் தனியே வழக்குப்பதிவு செய்தது.

இந்நிலையில் விஜய் மல்லையா வெளிநாட்டுக்குத் தப்பிச் செல்லாமல் இருப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் வழக்குத் தொடுத்தன. அந்த வழக்கு நிலுவையில் இருந்த நிலையில், விஜய் மல்லையா திடீரென எந்தத் தகவலும் அளிக்காமல் இந்தியாவை விட்டு வெளியேறி பிரிட்டனுக்கு கடந்த மார்ச் மாதம் சென்றுவிட்டார். அதன்பிறகு இந்தியாவுக்கு அவர் திரும்பி வரவில்லை.

இதனிடையே, அமலாக்கத் துறை தான் நடத்தும் விசாரணையில் நேரில் ஆஜராகும்படி விஜய் மல்லையாவுக்கு பலமுறை அழைப்பாணைகளை அனுப்பியது.

அதையேற்று விஜய் மல்லையா அமலாக்கத் துறை முன்பு நேரில் ஆஜராகவில்லை. அமலாக்கத் துறைக்கு அவர் தரப்பில் இருந்து உரிய பதிலும் தெரிவிக்கப்படவில்லை. இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறையின் கோரிக்கையை ஏற்று அவரது கடவுச்சீட்டை மத்திய அரசு கடந்த ஏப்ரல் மாதம் ரத்து செய்தது. மேலும், விஜய் மல்லையாவின் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை பறிப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வந்தது. இதையறிந்து கொண்டு விஜய் மல்லையா தனது எம்பி பதவியை கடந்த மே மாதம் ராஜிநாமா செய்தார்.

அதேசமயம், விஜய் மல்லையாவை பிரிட்டனில் இருந்து திருப்பி அனுப்ப வேண்டும் என்று அந்நாட்டு அரசுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கையை பிரிட்டன் அரசு நிராகரித்து விட்டது. விஜய் மல்லையாவை நாடு கடத்தி ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தால், அதுகுறித்து பரிசீலிக்கத் தயார் என்று பிரிட்டன் அரசு அறிவித்தது. எனவே சர்வதேச காவல்துறை அமைப்பான இன்டர்போலின் உதவியுடன் விஜய் மல்லையாவை கைது செய்ய அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top