ஐரோப்பிய கால்பந்து போட்டி: வெற்றியுடன் தொடங்கியது பிரான்ஸ் மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியாவை வீழ்த்தியது சுவிட்சர்லாந்து

ஐரோப்பிய கால்பந்து போட்டியில் பிரான்ஸ், சுவிட்சர்லாந்து அணிகள் வெற்றியுடன் தொடங்கியுள்ளன.

 

15–வது ஐரோப்பிய கால்பந்து (யூரோ) திருவிழா பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளும், 6 பிரிவுகளில் அதிக புள்ளியுடன் 3–வது இடத்தை பிடிக்கும் சிறந்த 4 அணிகளும் ‘ரவுண்ட் 16’ என்ற 2–வது சுற்றுக்கு முன்னேறும்.

இந்திய நேரப்படி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்த தொடக்க ஆட்டத்தில் பிரான்சும், ருமேனியாவும் (‘ஏ’ பிரிவு) பாரீஸ் நகரில் உள்ள ஸ்டேட் டி பிரான்ஸ் மைதானத்தில் மோதின. 7 மாதங்களுக்கு முன்பு இதே மைதான பகுதியில் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல் நடத்தியிருந்ததால் போட்டிக்கு வரலாறு காணாத பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.

உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் களம் புகுந்த பிரான்ஸ் அணி தொடக்கத்தில் சற்று மந்தமாகவே ஆடியது. போக போக ஆட்டம் வேகம் எடுத்தது. இரு அணி வீரர்களும் மாறி மாறி கோல் வலையை முற்றுகையிட்டபடி இருந்தனர். என்றாலும் பந்து பிரான்ஸ் வசமே (59 சதவீதம்) அதிகமாக சுற்றிக் கொண்டிருந்தது. பந்தை கடத்தி கொடுப்பதிலும் பிரான்ஸ் வீரர்களின் கையே ஓங்கி இருந்தது. முதல் பாதியில் கோல் விழாத நிலையில் 57–வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் ஆலிவர் ஜிரோட் தலையால் முட்டி கோலாக்கினார். ருமேனியா கோல் கீப்பர் சிப்ரியன் டாட்டாருசினு பந்தை வெளியே வந்து தள்ள முயற்சித்த போது அது அவருக்கு மேலாக பறந்து வலைக்குள் விழுந்து விட்டது. ஆனால் பிரான்ஸ் வீரர்களின் உற்சாகம் 7 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி ருமேனியா வீரர் போக்டன் ஸ்டான்கு பதில் கோல் போட்டு ஆட்டத்தை சமனுக்கு கொண்டு வந்தார்.

ருமேனியாவின் தடுப்பாட்டம் அருமையாக இருந்தது. குறிப்பாக அந்த அணியின் கோல் கீப்பர் சிப்ரியன், பிரான்சின் மூன்று கோல் வாய்ப்புகளை சாதுர்யமாக முறியடித்தார். இதனால் ஆட்டம் டிராவை நோக்கி நகர்ந்த நிலையில் 89–வது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் டிமிட்ரி பயேத் திருப்பத்தை ஏற்படுத்தி தந்தார். 25 மீட்டர் தூரத்தில் இருந்து பிரமாதமாக அவர் உதைத்த பந்து ருமேனியாவின் தடுப்பு ஆட்டக்காரர்கள் மற்றும் கோல் கீப்பரை தாண்டி கோலுக்குள் புகுந்தது.

இதனால் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரிப்பில் மிதந்தனர். மிகவும் உணர்ச்சி வசப்பட்ட டிமிட்ரி பயேத் ஆனந்த கண்ணீர் விட்டார். முடிவில் பிரான்ஸ் அணி 2–1 என்ற கோல் கணக்கில் ருமேனியாவை வீழ்த்தியது.

இதே பிரிவில் நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்தும், அறிமுக அணியான அல்பேனியாவும் சந்தித்தன. 5–வது நிமிடத்திலேயே சுவிட்சர்லாந்து வீரர் பாபியன் ஸ்சார் தலையால் முட்டி கோல் போட்டார். பதிலடி கொடுக்க முயற்சித்த அல்பேனியாவுக்கு பின்னடைவாக கேப்டன் லோரிக் கானா 36–வது நிமிடத்தில் 2–வது முறையாக மஞ்சள் அட்டை பெற்று ‘அது சிவப்பு அட்டைக்கு சமம்’ என்பதால் வெளியேற்றப்பட்டார். இதனால் எஞ்சிய நேரம் அல்பேனியா 10 வீரர்களுடன் ஆடும் நிலைமைக்கு தள்ளப்பட்டது. ஆனாலும் மேற்கொண்டு கோல்விழாமல் பார்த்துக் கொண்டனர். 87–வது நிமிடத்தில் அல்பேனியா மாற்று வீரர் ஷிகெல்சன் காஷி, தனிநபராக கோல் நோக்கி முன்னேறி பந்தை அடித்தார். அது கோலாகி விடுமோ என்று எதிர்பார்த்த வேளையில், சுவிட்சர்லாந்து கோல் கீப்பர் யான் சோமர் கண்ணிமைக்கும் நேரத்தில் சீறிப்பாய்ந்து பந்தை வெளியே தள்ளி தங்கள் அணியை காப்பாற்றினார். முடிவில் சுவிட்சர்லாந்து அணி 1–0 என்ற கோல் கணக்கில் அல்பேனியாவை தோற்கடித்தது.

இன்றைய ஆட்டங்களில் துருக்கி–குரோஷியா (மாலை 6.30 மணி), போலந்து–வடக்கு அயர்லாந்து (இரவு 9.30 மணி), ஜெர்மனி–உக்ரைன் (நள்ளிரவு 12.30 மணி) அணிகள் மோதுகின்றன.

தொடக்க ஆட்டத்திற்கு முன்பாக ஒரு சில இடங்களில் இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். போலீஸ் மீது பாட்டில்களையும், சேர்களையும் தூக்கி எறிந்தனர். இதையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைத்தனர். ஒரு சிலருக்கு காயம் ஏற்பட்டது. ரசிகர்களின் செயல் போட்டி அமைப்பாளர்களை கவலையடையச் செய்துள்ளது. கண்ணியமாக நடந்து கொள்ளும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top