சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும்; வைகோ வலியுறுத்தல்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து, ஒற்றை இந்து கலாசார நாடாக மாற்றவும், சமஸ்கிருத இந்தி மயமாக்கவும் ஆர்.எஸ்.எஸ். தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இந்த நிலையில், 2016–2017 கல்வி ஆண்டிலிருந்து மத்திய அரசுப்பள்ளிகள் அனைத்திலும் சமஸ்கிருத மொழிதான் மூன்றாவது பாடமாக கற்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகளில் சமஸ்கிருத மொழி கற்றுக்கொடுக்கவும், சமஸ்கிருத வேதங்களை ஒரு பாடமாக வைக்கவும், ‘வேதிக் போர்டு’ என்று சிறப்பு வேதப்பாடப் போதனை தனிப்பிரிவு ஜூன் 16–ந் தேதி முதல் மத்திய அரசுப்பள்ளிகளில் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி மந்திரி ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளது கண்டனத்துக்குரியது.

பல்வேறு தேசிய இனங்கள், மொழி, பண்பாடு இவற்றின் கூட்டமைப்புதான் இந்தியா என்பதை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு, அனைத்து மொழிகளுக்கும் சம உரிமை, சம வாய்ப்பு வழங்கினால்தான் தேசிய ஒருமைப்பாடு என்பதற்கு பொருள் இருக்கும். இல்லையேல் வேற்றுமையில் ஒற்றுமை என்பது வெற்று முழக்கமாகவே இருக்கும். எனவே மத்திய அரசு சமஸ்கிருதத்தை வலிந்து திணிக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.  இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top