சுஷில் குமார் – நர்சிங் விவகாரம்: தில்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

sushil kumar

ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரிய சுஷில் குமார் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மல்யுத்த சம்மேளன நடவடிக்கையில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.

31-வது ஒலிம்பிக் போட்டி வரும் ஆகஸ்டில் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க ஆடவர் 74 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவிலிருந்து நர்சிங் யாதவ் தகுதி பெற்றார். ஆனால் ஒலிம்பிக்கில் இரு பதக்கம் வென்றவரான சுஷில் குமார் காயம் காரணமாக தகுதிச்சுற்றில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் ஒலிம்பிக்கில் 74 கிலோ எடைப் பிரிவு போட்டியில் நானும் பங்கேற்க விரும்புகிறேன். அதனால் எனக்கும், நர்சிங் யாதவுக்கும் இடையே தகுதிப் போட்டியை நடத்தி அதில் வெற்றி பெறுபவரையே ஒலிம்பிக்கிற்கு அனுப்ப வேண்டும் என இந்திய மல்யுத்த சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்தார் சுஷில் குமார். ஆனால் அதற்கு இந்திய மல்யுத்த சம்மேளனம் மறுத்ததைத் தொடர்ந்து தில்லி உயர் நீதிமன்றத்தை நாடினார் சுஷில் குமார்.

இந்த வழக்கு விசாரணையின்போது இந்திய மல்யுத்த சம்மேளனம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் கூறியதாவது: சுஷில் குமார், நர்சிங் யாதவ் ஆகிய இருவருமே எங்களுக்கு முக்கியம். ஆனால் நர்சிங் யாதவ் தகுதிச்சுற்றின் மூலம் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார். அவருக்கு எப்படி அநீதி இழைக்க முடியும். மேலும் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் மல்யுத்த வீரர்கள் அனைவருடைய பெயரையும் ஏற்கெனவே அனுப்பிவிட்டோம் என தெரிவித்தார். இதையடுத்து சுஷில் குமார் தரப்பு வழக்குரைஞர் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜூன் 6-ம் தேதி தீர்ப்பு அறிவிக்கப்படும் என்றார்.

இந்நிலையில், ஒலிம்பிக் போட்டியில் யார் பங்கேற்பது என்பதை முடிவு செய்ய தனக்கும், நர்சிங் யாதவுக்கும் இடையே தகுதிப் போட்டியை நடத்த உத்தரவிடுமாறு இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமார் தொடுத்திருந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க அனுமதி கோரிய சுஷில்குமார் மனுவை தில்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி  செய்தது. மல்யுத்த சம்மேளன நடவடிக்கையில் தலையிடமுடியாது என்று தீர்ப்பளித்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top