ரகுராம் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும்:இணையத்தில் குவியும் ஆதரவு

RaghuramRajan

ரிசர்வ் வங்கி ஆளுநராக உள்ள ரகுராம் ராஜனுக்கு இரண்டாம் முறையாக பதவி நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று இணையதளம் வாயிலாக 60 ஆயிரத்துக்கும் அதிகமானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ராஜனுக்கு பதவிநீட்டிப்பு வழங்க வேண்டும் ஏற்கெனவே வலியுறுத்தியுள்ள நிலையில், அவருக்கான ஆதரவு பெருகி வருவதாகக் கருதப்படுகிறது.

இந்தியப் பொருளாதாரத்தை வேண்டுமென்றே சீர்குலைக்கும் நோக்கத்துடன் செயல்படும் ரகுராம் ராஜனைப் பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்று பாஜக எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தி வரும் நிலையில் ராஜனுக்கு பலரும் ஆதரவு தெரிவிப்பது முக்கியத்துவம் பெறுகிறது.

சேஞ்ச் டாட் ஓஆர்ஜி என்ற பெயரிலான இணையதளத்தில் ரகுராம் ராஜனுக்கு ஆதரவு திரட்டப்படுகிறது. இதில் பெங்களூரைச் சேர்ந்த ராஜேஷ் பலேரியா என்பவர் பதிவேற்றம் செய்த மனுவில் 57,000 பேர் கையெழுத்திட்டுள்ளனர்.

இதேபோல், குறைந்தது 6 மனுக்களில் ராஜனுக்கு ஆதரவாக கையெழுத்து பெறப்பட்டு வருகிறது. அந்த எண்ணிக்கை 3 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.

எதிர்ப்புக்கு ஆதரவில்லை: இதற்கிடையே, ரகுராம் ராஜனுக்கு இரண்டாம் முறையாக வாய்ப்பு வழங்க எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு பிரிவினர் இணையதளத்தில் கையெழுத்து பெற்று வருகின்றனர். ஆனால், அதற்கு 15 நபர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளனர்.

துணை ஆளுநருக்கு தேர்வு: இதனிடையே, ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் ஹெச்.ஆர்.கானின் பதவிக்காலம், அடுத்த மாதம் 7-ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அந்தப் புதிய நபரை மத்திய அரசு தேர்வு செய்யவுள்ளது.

இதற்காக, அமைச்சரவைச் செயலாளர் பிரதீப் குமார் சின்ஹா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவினர், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி தலைமையகத்தில் திங்கள்கிழமை (ஜூன் 6) நேர்முகத் தேர்வை நடத்துகின்றனர்.

ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், பிரதமர் அலுவலக கூடுதல் செயலாளர் மற்றும் 3 அல்லது 4 பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்டோர் அக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top