தீனதயாளன் வீட்டில் 3-வது நாளாக சோதனை: பாஸ்போர்ட்- வங்கி கணக்குகள் முடக்கம்

சென்னை ஆழ்வார்பேட்டையில் ஆந்திர தொழில் அதிபர் தீனதயாளன் வீட்டில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தி அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த சாமி சிலைகளை பறிமுதல் செய்தனர்.

இந்த சாமி சிலைகள் அனைத்தும் தமிழக கோவில்களில் திருடி கடத்தி வரப்பட்டு அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை வெளிநாடுகளுக்கு பல கோடிக்கு விலை பேசி விற்பனை செய்ய திட்டமிட்டிருந்த திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

சோதனையின் தொடக்க நாளில் 54 கற்சிலைகளும், 2-வது நாளாக நேற்று 2 அறைகளில் பதுக்கி வைக்கப்பட்ட 34 உலோக சிலைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவை அனைத்தும் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்தவை என தெரிய வந்தது.

வெளிநாடுகளில் இந்த சிலைகளுக்கு நல்ல கிராக்கி இருப்பதால் தீனதயாளன் கடந்த 20 ஆண்டுகளாக சிலை கடத்தல் தொழிலில் ஈடுபட்டு வந்தான்.

தற்போது அவனுக்கு 79 வயது ஆகிறது. ஆந்திராவைச் சேர்ந்த இவன் தலைமறைவாக இருக்கிறான். அவனை சரண் அடையுமாறு போலீசார் சம்மன் அனுப்பி வீட்டு வாசலில் அறிவிப்பை ஒட்டியுள்ளனர்.

தீனதயாளன் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க அவனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள 5 வங்கி கணக்குகளும் போலந்து மற்றும் டச்சு வங்கி கணக்குகளும் முடக்கப்பட்டது.

பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் தீனதயாளன் வெளிநாடு தப்பிச்செல்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே அவன் கோர்ட்டு மூலம் முன்ஜாமீன் பெற முயற்சிக்கலாம் என கருதி போலீசார் கண்காணித்து வருகிறார்கள். முன்ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவும் 2004-ம் ஆண்டு பழவூர் சிலை திருட்டு வழக்கில் வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவும் போலீசார் தயாராகி வருகிறார்கள்.

இதற்கிடையே தீனதயாளனின் ஆழ்வார்பேட்டை பங்களாவில் சிலை தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், டி.எஸ்.பி. சுந்தரம் ஆகியோர் தலைமையில் 3-வது நாளாக சோதனை நடத்தினார்கள். திறக்கப்படாமல் இருந்த மேலும் 2 அறைகளில் சோதனை நடைபெற்று வருகிறது.

இங்கும் ஏராளமான சிலைகள் பதுக்கி வைக்கப்பட்டு உள்ளது. அவற்றை போலீசார் ஒவ்வொன்றாக எடுத்து கைப்பற்றி வருகிறார்கள். தீனதயாளன் நூற்றுக்கணக்கில் சாமி சிலைகளை பதுக்கி வைத்திருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top