ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 34 ஈழத்தமிழர்கள் சென்னையில் கைதுசெய்யப்பட்டனர்

sri-lankan-tamil-refugees

சென்னை பழவேற்காடு கடற்கரை பகுதியில் இருந்து படகு மூலம் ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 34 ஈழத்தமிழர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சென்ற வேன்களை பறிமுதல் செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் தங்கியுள்ள ஈழத்தமிழர்களிடம் ஆஸ்திரேலியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு அனுப்பி வைப்பதாக கூறி அவர்களிடம் பெருமளவில் பணம் பறிக்கும் இடைத்தரர்கள் கும்பல்கள் தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வருகின்றனர்.

இதுபோல் இவர்களிடம் பணம் பறித்துக் கொண்டு ஏதாவது ஒரு படகில் அளவுக்கு அதிகமான நபர்களை ஏற்றி அனுப்பி விடுகிவின்றனர். பல சமயங்களில் இந்த படகுகள் குறிப்பிட்ட நாடுகளுக்கு செல்ல முடியாமல் அதிக எடை காரணமாக விபத்தில் சிக்கும் அபாயங்கள் ஏற்படுகின்றன. மேலும் ஏதேனும் ஒரு மணல் திட்டு பகுதியில் இவர்களை இறக்கிவிட்டுச் செல்லும் சம்பவங்களும் நடைபெறுகின்றன. இவைகளை மீறி வெளிநாடுகளுக்குச் செல்லும் அகதிகள் பலர் உரிய அனுமதி இல்லாமல் சென்று அங்குள்ள காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கும் ஆளாகின்றனர் திருவள்ளூர் மாவட்டத்தில் புழல், கும்மிடிப்பூண்டி மற்றும் வேலூர், காஞ்சீபுரம், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் இலங்கை அகதிகள் முகாம்கள் உள்ளன.

இங்குள்ள அகதிகளில் சிலர் படகு மூலம் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல தலா ஒருவருக்கு ஒன்றரை லட்சம் வீதம் இடைத்தரகர்களை அணுகி பணம் கொடுத்து அனைத்து ஏற்பாடுகளும் செய்து இருந்தனர். கேரளா, ஆந்திரா, தமிழகத்தில் கன்னியாகுமரி, பழவேற்காடு ஆகிய இடங்களில் இருந்து உள்ளூர் படகுகள் மூலம் தப்பிச்சென்று நடுக்கடலில் ஏற்பாடுகள் செய்யப்பட்ட வேறு படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு செல்ல 6 மாதங்களாக திட்டமிட்டிருந்தனர்.

இந்த தகவல் கியூ பிரிவு போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களை போலீசார் கண்காணித்து வந்தனர். தமிழக சட்டசபை தேர்தலின் போது போலீசாரின் கெடுபிடியால் அகதிகள் தப்பிச்செல்லும் திட்டம் நிறைவேறவில்லை. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைந்ததை கியூ பிரிவு போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு முகாமில் உள்ளவர்களை கண்காணித்தனர்.

அப்போது 30க்கும் மேற்பட்டோர் மாமல்லபுரத்தில் ஒன்று கூடியது தெரியவந்தது. அங்குள்ள காட்டுப்பகுதியில் இருந்து 6 வேன்களில் புதன்கிழமை நள்ளிரவு தங்களுக்கு தேவையான துணிகள், உணவுப்பொருட்கள், ரொக்கப்பணம் உள்ளிட்டவற்றுடன் அகதிகள் புறப்பட்டனர். இதனை கண்காணித்த கியூ பிரிவு போலீசார் திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கு தகவல் அளித்தனர். 6 வேன்களும் சோழவரம், பழவேற்காடு பகுதிக்கு செல்வது தெரியவந்தது. வியாழக்கிழமையன்று அந்த வழியாக வந்த 3 வேன்களை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் ஈழத் தமிழர்கள்  என தெரியவந்ததால் 6 குழந்தைகள், 6 பெண்கள் உள்பட 18 பேரை போலீசார் கைது செய்தனர். வேன்களை ஓட்டி வந்த 3 டிரைவர்களும் கைதானார்கள். வேன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில் அவர்கள் வேலூர், கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாம்களில் இருந்தவர்கள் என்பது தெரியவந்தது. ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச்சென்று அங்கு நிரந்தர குடியுரிமை பெற வேண்டும் என்பதற்காக பழவேற்காட்டில் இருந்து நாட்டுப்படகில் தப்பிச்செல்ல முயற்சி செய்ததாக தெரிவித்தனர்.

இதே போல் சோழவரம் ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலை சந்திப்பில் 3 வேன்களில் வந்த 11 பேரை போலீசார் மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அகதிகள் முகாமில் இருந்தவர்கள் என்றும், ஆஸ்திரேலியாவிற்கு பழவேற்காட்டிலிருந்து படகு மூலம் கள்ளத்தனமாக தப்பிச்செல்ல முயன்றதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அவர்கள் வந்த 3 வேன்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட அகதிகள் தம்பா, சந்திரன், கண்ணன் என்கிற ரவிச்சந்திரன், தயாபரன் மற்றும் வேன் டிரைவர்கள் சங்கர், அசோக் என்கிற கணேசன், சுகுமாறன் ஆகியோர் பொன்னேரி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். குழந்தைகள், பெண்கள் உள்ளிட்ட மற்றவர்கள் அவர்கள் தங்கி இருந்த அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.

இதேபோல் கும்மிடிப்பூண்டி அகதிகள் முகாமில் தங்கியிருந்த 5 பேர் பழவேற்காடு கடல் பகுதி வழியாக ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்ல திட்டமிட்டு புதன்கிழமையன்று இரவு கல்பாக்கத்தை அடுத்த பெருமாள்சேரியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தனர். கடலோர காவல்படையினர் நேற்று அதிகாலை அந்த வீட்டை முற்றுகையிட்டனர். அங்கு தங்கியிருந்த 5 பேரையும் பிடித்து மாமல்லபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சேகரிடம் ஒப்படைத்தனர்.

4 பேர் புழல் சிறையிலும், சிறுவன் செங்கல்பட்டு சீர்திருத்த பள்ளியிலும் அடைக்கப்பட்டனர். அகதிகள் முகாமில் இருந்து தப்பி ஆஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற அகதிகள், போலீசில் சிக்கி தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அகதிகள் முகாமில் இருந்து தப்பி பிடிப்பட்டவர்கள் 34 பேர் என்றும் ஏற்கனவே 15 பேர் தப்பிவிட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தமிழகத்தில்  முகாமில் உள்ள ஈழத்தமிழர்களுக்கு சரியான வேலை இல்லாததாலும் ,போலீஸ் தொந்தரவு அதிகமாக இருப்பதாலும் போலீஸ் இவர்களை குற்றவாளிகள் போல் நடத்துகிறார்கள் என்பதாலுமே இவ்வாறு உயிரை பணயம் வைத்து வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சி செய்கிறார்கள். ஆகையால் அரசாங்கம் முதலில் தன்னை சரி செய்ய வேண்டும் அகதிகள் விசயத்தில் அவர்கள் குற்றவாளிகள் இல்லை என்பதை போலீஸ் எண்ண வேண்டும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top