பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி இன்று தொடக்கம்

பிரேசில், அர்ஜென்டினா உள்பட 16 அணிகள் பங்கேற்கும் கோபா அமெரிக்கா கால்பந்து போட்டி அமெரிக்காவில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

Brazil-Argentina-including16-participating-teams--Copa_SECVPFகோபா அமெரிக்கா கால்பந்து போட்டி, தென்அமெரிக்க நாடுகளில் பிரபலம் வாய்ந்ததாகும். 1916–ம் ஆண்டு முதல் நடந்து வரும் இந்த போட்டி நூற்றாண்டு கொண்டாட்டத்தை எட்டியிருக்கிறது.

இதன்படி 45–வது கோபா அமெரிக்கா கால்பந்து திருவிழா இன்று முதல் வருகிற 26–ந்தேதி வரை அமெரிக்காவில் 10 மைதானங்களில் நடைபெறுகிறது. தென்அமெரிக்க கண்டத்துக்கு வெளியே இந்த போட்டி அரங்கேறுவது இதுவே முறையாகும். இதில் தென்அமெரிக்காவைச் சேர்ந்த 10 அணிகளும், வட அமெரிக்கா, மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் கால்பந்து கூட்டமைப்புக்கு உட்பட்ட 6 அணிகளும் என்று மொத்தம் 16 அணிகள் களம் இறங்குகின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

‘ஏ’ பிரிவில் அமெரிக்கா, கொலம்பியா, கோஸ்டாரிகா, பராகுவே, ‘பி’ பிரிவில் ஹைதி, பெரு, பிரேசில், ஈகுவடார், ‘சி’ பிரிவில் ஜமைக்கா, வெனிசுலா, மெக்சிகோ, உருகுவே, ‘டி’ பிரிவில் பனாமா, பொலிவியா, அர்ஜென்டினா, நடப்பு சாம்பியன் சிலி ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.

ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெறும்.

லயோனல் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா அணிக்கே கோப்பையை வெல்ல பிரகாசமான வாய்ப்பு இருப்பதாக கணிக்கப்பட்டுள்ளது. மெஸ்சி, கோன்சலோ ஹிகுவைன், ஏஞ்சல் டி மரியா உள்ளிட்டோர் அந்த அணியின் நட்சத்திர வீரர்களாக மிளிருகிறார்கள். ஆனால் பார்சிலோனா கிளப் அணிக்காக ஆடும் மெஸ்சி மீது, வரிகட்டாமல் ரூ.31 கோடிக்கு வருமான வரி ஏய்ப்பு செய்ததாக ஸ்பெயின் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் மெஸ்சி தனது தந்தையுடன் நேற்று ஆஜரானார். இதனால் முதலாவது ஆட்டத்தில் அவர் ஆடுவதில் சந்தேகம் நிலவுகிறது.

அர்ஜென்டினா அணி 2014–ம் ஆண்டு உலக கோப்பை இறுதி ஆட்டத்திலும், கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா இறுதி ஆட்டத்திலும் தோல்வியை தழுவியது. 1993–ம் ஆண்டுக்கு பிறகு அர்ஜென்டினா அணி பெரிய அளவிலான போட்டிகளில் மகுடம் சூடியதில்லை. அந்த சோகத்துக்கு இந்த முறையாவது விடைகொடுத்து விட வேண்டும் என்பதில் அர்ஜென்டினா வீரர்கள் தீவிரமாக இருக்கிறார்கள். ‘அர்ஜென்டினா அணி கோப்பையை வென்று நீண்ட காலம் ஆகி விட்டது. இந்த முக்கியமான போட்டியில் நாங்கள் சாம்பியன் பட்டம் வெல்வதற்குரிய தகுதியான அணியாக இருப்போம்’ என்று மெஸ்சி சூளுரைத்துள்ளார். அர்ஜென்டினாவுக்கு பலம் வாய்ந்த மெக்சிகோ கடும் சவாலாக விளங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

1997 முதல் 2007–ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் கோபா அமெரிக்கா கோப்பையை பிரேசில் அணி 4 முறை ருசித்தது. ஆனால் அதன் பிறகு பிரேசில் அணியில் குறிப்பிடும்படியான எழுச்சி இல்லை. 2014–ம் ஆண்டு உலக கோப்பை அரைஇறுதியில் ஜெர்மனியிடம் 1–7 என்ற கோல் கணக்கில் உதை வாங்கியது. கடந்த ஆண்டு கோபா அமெரிக்கா போட்டியில் கால்இறுதியுடன் நடையை கட்டியது. பயிற்சியாளர் துங்கா தலைமையில் இளம் வீரர்களை கொண்டு களம் காணும் பிரேசில் மீண்டும் சாதிக்குமா? என்று ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

ஆனால் பிரேசில் அணியில் முன்னணி வீரர் நெய்மார் இந்த முறை விளையாடவில்லை. அவர் சார்ந்துள்ள பார்சிலோனா கிளப் நிர்வாகம் நெய்மாரை கோபா அமெரிக்கா அல்லது ஒலிம்பிக் ஆகிய ஏதாவது ஒரு போட்டியில் மட்டுமே விளையாடுவதற்கு விடுவிக்க முடியும் என்று கூறியது. இதனால் அவர் சொந்த மண்ணில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் மட்டும் கலந்து கொள்ள இருக்கிறார். தியாகோ சில்வா, டேவிட் லூயிஸ், மார்செலோ ஆகியோருக்கு பிரேசில் அணியில் இடம் கிட்டவில்லை. தசைப்பிடிப்பு காரணமாக காகாவும் கடைசி நேரத்தில் விலகியிருக்கிறார்.

காயத்தால் சுவாரஸ் அவதி

உருகுவேயும் பட்டம் வெல்ல வாய்ப்புள்ள அணிகளில் ஒன்றாக தென்படுகிறது. அந்த அணியின் நட்சத்திர வீரர் லூயிஸ் சுவாரஸ் காயத்தால் அவதிப்படுவதால் தொடக்க கட்ட ஆட்டங்களில் அவர் ஆடமாட்டார். ஜாவியர் ஹெர்னாண்டஸ் (மெக்சிகோ), ஜேம்ஸ் ரோட்ரிக்ஸ் (கொலம்பியா), வில்லியன், கேப்ரியல் (பிரேசில்), டியாகோ காடின் (உருகுவே), அலெக்சிஸ் சாஞ்சஸ், கிளாடியோ பிராவோ, அர்துரோ விடால் (சிலி), கிறிஸ்டியன் புலிசிக், ஜெர்மைன் ஜோன்ஸ் (அமெரிக்கா) உள்ளிட்டோரும் இந்த தொடரில் ரசிகர்களின் கவனிக்கத்தக்க வீரர்களாக இருக்கிறார்கள்.

இந்த கோப்பையை அதிகபட்சமாக உருகுவே 15 முறையும், அர்ஜென்டினா 14 முறையும், பிரேசில் 8 முறையும் கைப்பற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவும், கொலம்பியாவும் மோதுகின்றன. அமெரிக்க உள்ளூர் நேரப்படி இந்த ஆட்டம் இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி மறுநாள் காலை 7 மணிக்கு ஆட்டம் ஆரம்பமாகும். பிரேசில் அணி தனது முதல் ஆட்டத்தில் ஈகுவடாரையும் (ஜூன் 4–ந்தேதி), அர்ஜென்டினா அணி சிலியையும் (ஜூன் 6–ந்தேதி) சந்திக்கிறது. அனைத்து ஆட்டங்களையும் சோனி சிக்ஸ், சோனி இ.எஸ்.பி.என். சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top