தமிழக சட்டப் பேரவை நாளை கூடுகிறது: பேரவைத் தலைவராக தனபால் தேர்வாகிறார்

தமிழ்நாடு அரசு

தமிழக சட்டப் பேரவை வெள்ளிக்கிழமை (ஜூன் 3) கூடுகிறது. அதில், பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்வு தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட உள்ளன.

15-வது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடர் கடந்த 25 ஆம் தேதி நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் பதவியேற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலுக்கான அறிவிப்பை வெளியிட்ட தாற்காலிகத் தலைவர் எஸ்.செம்மலை, பேரவையை ஜூன் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இதனிடையே, சட்டப் பேரவைத் தலைவர் தேர்தலுக்கு அதிமுக சார்பில் பி.தனபாலும், துணைத் தலைவர் தேர்தலுக்கு பொள்ளாச்சி வி.ஜெயராமனும் வேட்பாளர்களாக அறிவிக்கப்படுவதாக கட்சியின் பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டார்.

பேரவைத் தலைவர், துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 2 ஆம் தேதி நண்பகலுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அதிமுக வேட்பாளர்களான தனபாலும், பொள்ளாச்சி வி.ஜெயராமனும் வேட்புமனுக்களை வியாழக்கிழமை (ஜூன் 2) தாக்கல் செய்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரவையில் அறிவிப்பு: வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்டோர் குறித்த விவரம் வெள்ளிக்கிழமை கூடவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தில் அறிவிப்பாக வெளியிடப்படும். இந்த அறிவிப்பை பேரவையின் தாற்காலிகத் தலைவர் செம்மலை வெளியிடுவார்.

இதன்பின், தேர்வு செய்யப்பட்ட பேரவைத் தலைவரை அவை முன்னவரும், எதிர்க்கட்சித் தலைவரும் இருக்கையில் அமர வைப்பர். இந்த நிகழ்வுகளுக்குப் பிறகு, பேரவைத் தலைவர் ஏற்புரை நிகழ்த்துவார். அவரது உரைக்குப் பிறகு, அவை நடவடிக்கைகள் அனைத்தும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top