2017-ம் ஆண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி; அட்டவணை வெளியிடப்பட்டது. ஒரே பிரிவில் இந்தியா, பாகிஸ்தான்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் 2017-ம் ஆண்டு ஜூன் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை இங்கிலாந்தில் நடைபெறுகிறது. இன்னும் ஒருவருட காலம் உள்ள நிலையில் இந்த தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம் பிடித்துள்ளன.

2015-ம் ஆண்டு செப்டம்பர் 30-ம் தேதி நிலவரப்படி தரவரிசை பட்டியலில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் இந்த தொடரில் கலந்து கொள்கின்றன. இதன்படி தரவரிசையில் நம்பர் ஒன் இடத்தில் உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு முதல் நிலை அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனான இந்தியாவுக்கு 2-வது இடம் கொடுக்கப்பட்டுள்ளது.

சாம்பியன் டிராபி தொடர் இங்கிலாந்தில் நடைபெறுவது இது 3-வது முறையாகும். 2004 மற்றும் 2013-ம் ஆண்டுகளிலும் போட்டியை இங்கிலாந்தே நடத்தியது. இரு முறையும் இங்கிலாந்து அணி இறுதிப்போட்டி வரை முன்னேறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தொடரில் கலந்து கொள்ளும் 8 அணி களும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட் டுள்ளது. போட்டியை நடத்தும் இங்கி லாந்து ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இதே பிரிவில் ஆஸ்திரேலியா, நியூஸி லாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளும் உள்ளன. பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

18 நாட்கள் நடத்தப்படும் இந்த தொடரில் மொத்தம் 15 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. கார்டிப், ஓவல், எட்ஜ்பஸ்டன் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்படுகிறது. இறுதிப்போட்டி ஜூன் 18-ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடரின் முதல் ஆட்டத்தில் ஜூன் 1-ம் தேதி இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இந்தியா தனது முதல் ஆட் டத்தில் 4-ம் தேதி பாகிஸ்தானுடன் மோது கிறது. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம் பெற்றுள்ள மற்ற அணி களுடன் தலா ஒரு முறை மோதும்.
புள்ளிகள் அடிப்படையில் இரு பிரிவிலும் இருந்து தலா இரு அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறும். அரையிறுதி ஆட்டங்கள் 14 மற்றும் 15-ம் தேதிகளில் நடைபெறுகிறது. 19-ம் தேதி ரிசர்வ் நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 18-ம் தேதி நடத்தப்படும் இறுதிப்போட்டி ஒருவேளை மழை காரணமாக பாதிக்கப்பட்டால் 19-ம் தேதி நடைபெறும்.

1998 முதல் ஐசிசி சாம்பியன் டிராபி நடத்தப்பட்டு வருகிறது. இதன் முதல் தொடரை தென் ஆப்ரிக்கா வென்றது. 2000-ம் ஆண்டு நியூஸிலாந்து பட்டம் வென்றது. 2002-ல், இந்தியா, இலங்கை அணிகள் கோப்பையை பகிர்ந்து கொண்டன. 2004-ல் மேற்கிந்தியத் தீவுகள் அணி மகுடம் சூடியது. 2006, 2009-ல் ஆஸ்திரேலிய அணி கோப்பையை தட்டிச்சென்றது. 2013-ல் இந்தியா கோப்பை வென்றது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top