ஐ.பி.எல். கிரிக்கெட்: 8 ரன் வித்தியாசத்தில் பெங்களூருவை சாய்த்தது ஐதராபாத் அணி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் திரிலிங்கான இறுதி ஆட்டத்தில் ஐதராபாத் அணி பெங்களூருவை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை சுவைத்தது.

ffff
9-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் திருவிழாவில் நேற்றிரவு இறுதிப்போட்டி நடந்தது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடந்த மகுடத்திற்கான இந்த ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், ஐதராபாத் சன் ரைசர்சும் மோதின. ஐதராபாத் அணியில் ஒரே ஒரு மாற்றமாக டிரென்ட் பவுல்ட் நீக்கப்பட்டு, காயத்தில் இருந்து குணமடைந்த முஸ்தாபிஜூர் ரகுமான் அணிக்கு திரும்பினார்.

‘டாஸ்’ ஜெயித்த ஐதராபாத் கேப்டன் வார்னர் தைரியமாக முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். இதன்படி டேவிட் வார்னரும், ஷிகர் தவானும் ஐதராபாத்தின் இன்னிங்சை தொடங்கினர். ஓரிரு ஓவர் நிதானத்துக்கு பிறகு இருவரும் அதிரடியில் இறங்கினர். தவான், 6 ரன்னில் கொடுத்த கேட்ச்சை பந்து வீசிய கெய்ல் தவற விட்டதை சரியாக பயன்படுத்திக் கொண்டார். வார்னர் வழக்கம் போல் சரமாரியான தாக்குதலை தொடுத்தார். வாட்சன் வீசிய 5-வது ஓவரில் இருவரும் தலா ஒரு சிக்சரை பறக்க விட்டு ரன்வேகத்துக்கு அடித்தளம் போட்டனர். சிறிய மைதானம் மட்டுமின்றி, ஆடுகளம் முழுமையாக பேட்டிங்குக்கு சாதகமாக தென்பட்டதால் பந்து வீச்சாளர்களால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் (6.4 ஓவர்) திரட்டி வலுவான அஸ்திவாரம் அமைத்து கொடுத்தது. தவான் 28 ரன்களில் (25 பந்து, 3 பவுண்டரி, ஒரு சிக்சர்) கேட்ச் ஆனார். அடுத்து வந்த ஹென்ரிக்ஸ் 4 ரன்னில் வெளியேறினாலும் 3-வது விக்கெட்டுக்கு ஆட வந்த யுவராஜ்சிங், தனது முதல் ஐ.பி.எல். இறுதி சுற்றில் கணிசமான பங்களிப்பை அளித்தார்.

இதற்கிடையே வார்னர் 24 பந்துகளில் அரைசதத்தை பூர்த்தி செய்தார். நடப்பு தொடரில் அவரது 9-வது அரைசதம் இதுவாகும். அத்துடன் ஐ.பி.எல். இறுதிப்போட்டியில் அதிவேகமாக அரைசதம் விளாசிய சுரேஷ் ரெய்னாவின் (சென்னை அணிக்காக 2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் 24 பந்தில் அரைசதம்) சாதனையை சமன் செய்தார்.

52 ரன்னில் இருந்த போது கேட்ச் கண்டத்தில் தப்பி பிழைத்த வார்னர், ரன்ரேட்டை ஏறக்குறைய 10 ரன்கள் வீதம் கொண்டு செல்வதில் கவனமுடன் செயல்பட்டார். அணியின் ஸ்கோர் 125 ரன்களாக உயர்ந்த போது வார்னர் 69 ரன்களில் (38 பந்து, 8 பவுண்டரி, 3 சிக்சர்) ஆட்டம் இழந்தார். அடுத்து வந்த தீபக் ஹூடா 3 ரன்னிலும், யுவராஜ்சிங் 38 ரன்களிலும் (23 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) நமன் ஓஜா 7 ரன்னிலும், பிபுல் ஷர்மா 5 ரன்னிலும் நடையை கட்ட, ஐதராபாத் அணி 200 ரன்களை தொடுமா? என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இறுதி கட்டத்தில் ஆல்-ரவுண்டர் பென் கட்டிங் (ஆஸ்திரேலிய நாட்டவர்) மிரட்டினார். வாட்சனின் கடைசி ஓவரில் 3 சிக்சரும், ஒரு பவுண்டரியும் விரட்டியடித்து வியப்பூட்டினார். இதில் ஒரு சிக்சர் 117 மீட்டர் தூரத்துக்கு மைதானத்தை விட்டு வெளியே போய் விழுந்தது.
நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. கடைசி 3 ஓவர்களில் மட்டும் ஐதராபாத் பேட்ஸ்மேன்கள் 52 ரன்களை சேகரித்தனர். பென் கட்டிங் 39 ரன்களுடன் (15 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) களத்தில் இருந்தார். ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இதற்கு முன்பு 2014-ம் ஆண்டு பஞ்சாப்புக்கு எதிராக 205 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. பெங்களூரு தரப்பில் கிறிஸ் ஜோர்டான் 3 விக்கெட்டுகளும், அரவிந்த் 2 விக்கெட்டும், யுஸ்வேந்திர சாஹல் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். வாட்சன் 4 ஓவர்களில் 61 ரன்களை வாரி வழங்கினாரே தவிர ஒரு விக்கெட்டும் எடுக்கவில்லை.

அடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிறிஸ் கெய்லும், கேப்டன் விராட் கோலியும் களம் புகுந்தனர். அதிரடியில் வெளுத்து வாங்கிய கெய்ல் சிக்சர் மழை பொழிந்து ரசிகர்களை குஷிப்படுத்தினார். அவரை அடிக்க விட்டு கோலி அதற்கு ஏற்ப ஒத்துழைப்பு தந்தார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் எகிறியது. 25 பந்துகளில் கெய்ல் அரைசதத்தை எட்டினார். பெங்களூர் அணி 9 ஓவர்களில் 100 ரன்களை தாண்டி பிரமாதப்படுத்தியது.

இந்த ஜோடி 114 ரன்கள் விளாசிய நிலையில் பிரிந்தது. கெய்ல் 76 ரன்களில் (38 பந்து, 4 பவுண்டரி, 8 சிக்சர்) பென் கட்டிங்கின் பந்து வீச்சில் கேட்ச் ஆனார். இதன் பின்னர் கோலியின் பேட் வேகம் காட்டியது. அரைசதத்தை கடந்த கோலி 54 ரன்களில் (35 பந்து, 5 பவுண்டரி 2 சிக்சர்) போல்டு ஆனார். அடுத்து வந்த டிவில்லியர்ஸ் 5 ரன்னில் கேட்ச் ஆக ஐதராபாத் பவுலர்கள் உற்சாகமடைந்தனர். தொடர்ந்து லோகேஷ் ராகுல் (11 ரன்), ஷேன் வாட்சன் (11 ரன்), ஸ்டூவர்ட் பின்னி (9 ரன்) ஆகியோரும் சீக்கிரமாகவே வெளியேற சரியான பாதையில் பயணித்த பெங்களூரு அணி நெருக்கடி வளையத்தில் சிக்கியது.

கடைசி ஓவரில் பெங்களூரு அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. கிறிஸ் ஜோர்டான், சச்சின் பேபி களத்தில் நின்றனர். பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர்குமார் வீசினார். முதல் 3 பந்தில் 3 ரன் மட்டுமே எடுத்து ஜோர்டானின் (3 ரன்) விக்கெட்டை இழந்தனர். இதையடுத்து 3 பந்தில் 15 ரன்கள் தேவையாக இருந்தது. எஞ்சிய 3 பந்தில் 6 ரன் மட்டுமே கொடுத்து புவனேஸ்வர்குமார் தங்கள் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

பெங்களூரு அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 200 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் 8 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்று முதல் முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றியது. அந்த அணிக்கு ரூ.20 கோடி பரிசாக கிடைத்தது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top