ஹெலிகாப்டர் ஊழல்; இத்தாலி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து; மனோகர் பாரிக்கர்

mano

ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றதால் இத்தாலி நிறுவனத்துடனான அனைத்து ஒப்பந்தங்களும் ரத்து செய்யப்படுகிறது என்று ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறினார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 2010-ம் ஆண்டு இத்தாலி நாட்டின் பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான அகஸ்டா வெஸ்ட்லேண்டிடம் இருந்து முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்ய 12 அதிநவீன ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கு செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ஊழல் நடந்தது தெரிய வந்தது. இத்தாலி கோர்ட்டு அண்மையில் இது தொடர்பாக நடத்திய வழக்கின் தீர்ப்பில் இது உறுதிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து பின்மெக்கானிக்கா மற்றும் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஆகிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த ராணுவ மந்திரி மனோகர் பாரிக்கர் கூறியதாவது:-

ஏற்கனவே பின்மெக்கானிக்கா மற்றும் அதன் துணை நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க தொடங்கி விட்டது. இது தொடர்பான குறிப்பு சட்ட அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டும் உள்ளது.

மேலும் தற்போது ராணுவத்துக்கு தேவையான தளவாட கொள்முதலுக்காக இத்தாலி நிறுவனத்துடன் செய்துகொண்ட அனைத்து ஒப்பந்தங்களையும், டெண்டர்களையும் ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்து உள்ளது. அதே நேரம், ராணுவ தளவாடங்களுக்கான உதிரிபாகங்கள், வருடாந்திர பராமரிப்புக்கு தேவையான உதிரிபாகங்கள் கொள்முதல் செய்வது குறித்து ஏற்கனவே செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி தொடர்ந்து நடைபெறும்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது நீர்மூழ்கி கப்பல்களுக்கு தேவையான தளவாடங்களை பெறுவதற்கு பின்மெக்கானிக்காவின் துணை நிறுவனமான ‘வாஸ்’சிடம் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு இருந்தது. அதையும் ரத்து செய்துவிட்டோம். இதற்கான மாற்றுவழி குறித்து மத்திய அரசு தற்போது நடவடிக்கை எடுத்து வருகிறது. கருப்பு பட்டியலில் வைக்கப்படும் நிறுவனங்களிடம் குறிப்பிட்ட காலத்துக்கு ராணுவ தளவாட கொள்முதலை ராணுவ அமைச்சகம் வைத்துக் கொள்ளாது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top