புதுச்சேரி துணைநிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்றார்

புதுச்சேரி மாநில புதிய துணைநிலை ஆளுநராக கிரண்பேடி ஞாயிற்றுக்கிழமை மாலை பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி ஜி.ரமேஷ் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

kiran

நாட்டின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரியான கிரண்பேடியை, புதுவை துணைநிலை ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டார். இதையடுத்து சனிக்கிழமை புதுவைக்கு வந்த கிரண்பேடிக்கு ஆளுநர் மாளிகையில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, ஐஜி பிரவீர் ரஞ்சன் மற்றும் அதிகாரிகள் வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், பதவியேற்பு விழா ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆளுநர் மாளிகை வளாகத்தில் நடைபெற்றது. தலைமைச் செயலர் மனோஜ் பரிதா குடியரசுத் தலைவரின் அறிவிக்கையை வாசித்தார். பிறகு, துணைநிலை ஆளுநராக கிரண்பேடிக்கு உயர் நீதிமன்ற நீதிபதி ரமேஷ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில், முதல்வராக பதவியேற்க உள்ள வி.நாராயணசாமி, முன்னாள் முதல்வர் என்.ரங்கசாமி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், கோகுலகிருஷ்ணன், சட்டப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

பதவியேற்புக்கு முன்பே ஆலோசனை

புதுச்சேரி துணைநிலை ஆளுநராக நியமிக்கப்பட்ட கிரண்பேடி, பதவியேற்புக்கு முன்னரே தலைமைச் செயலகத்தில் அரசுத் துறைச் செயலர்கள், இயக்குநர்களின் ஆலோசனைக் கூட்டத்தை ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் கூட்டினார். இதில் தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா மற்றும் அரசுச் செயலர்கள், துறைகளின் இயக்குநர்கள், தலைவர்கள் கலந்து கொண்டனர்.

பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் காவல் துறையின் செயல்பாடுகள், சட்டம்-ஒழுங்கு நிலைமை, துறைகளில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் போன்றவை குறித்து கிரண்பேடி கேட்டறிந்ததாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top