சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சு தோல்வி

nlc

சென்னையில் நடந்த என்.எல்.சி. முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. மறு பேச்சுவார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

நெய்வேலி என்.எல்.சி. பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் 13 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களை உச்சநீதிமன்ற ஆணையின்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சுங்கத்துறை சட்டத்தின்படி, பஞ்சபடி வழங்க வேண்டும் உள்பட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்.எல்.சி. நிர்வாகத்திடம் ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் கடந்த ஏப்ரல் 14-ந் தேதி வேலைநிறுத்த போராட்ட நோட்டீசு அளித்தது.

இதைத்தொடர்ந்து சென்னை சாஸ்திரிபவனில் உள்ள மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி கமிஷனர் எஸ்.அண்ணாதுரை, தொழிற்சங்க நிர்வாகிகளை கடந்த 20-ந் தேதி அழைத்து பேசினார். இதில், என்.எல்.சி. நிர்வாகம் தரப்பில் யாரும் கலந்துகொள்ளாததால் பேச்சுவார்த்தை 27-ந் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

அதன்படி, சென்னை சாஸ்திரிபவனில் மத்திய தொழிலாளர் துறை அலுவலகத்தில், உதவி கமிஷனர் எஸ்.அண்ணாதுரை முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடந்தது. இதில், நிர்வாகம் தரப்பில் மனிதவள மேம்பாடு கூடுதல் பொதுச்செயலாளர் திருகுமாரும், ஒப்பந்த தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்ட செயலாளர் எஸ்.சேகர் உள்பட நிர்வாகிகளும் பங்கேற்றனர்.

மதியம் 2.10 மணிக்கு தொடங்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தை மாலை 5.10 வரை சுமார் 3 மணி நேரம் நடந்தது. கடைசியில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இதுகுறித்து எஸ்.சேகர் நிருபர்களிடம் கூறும்போது, ‘என்.எல்.சி. நிர்வாகத்தின் பிடிவாதத்தால் பேச்சுவார்த்தை சுமுகமாக முடியாமல் தோல்வியில் முடிந்துள்ளது. மறு பேச்சு வார்த்தை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தகட்ட பேச்சுவார்த்தை தொழிலாளர் கமிஷனர் முன்னிலையில் நடத்தப்படும் என்று துணை கமிஷனர் அறிவித்துள்ளார். 29-ந் தேதி (நாளை) தொழிலாளர் சங்கத்தின் பேரவை கூட்டம் நடக்கிறது. இதில், வேலைநிறுத்தம் குறித்து முடிவு எடுக்கப்படும்’ என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top