தென் மாவட்டங்களில் பரவலாக சூறைக்காற்றுடன் பலத்த மழை

mazhai

அக்னி நட்சத்திரம் முடிவடையும் நிலையில் தென் மாவட்டங்களான மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று பரவலாக பலத்த காற்றுடன் மழை பெய்தது.

கடந்த 4-ந்தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்று (சனிக்கிழமை) முடிவடைகிறது. அக்னி நட்சத்திரம் நிறைவடையும் நிலையில் தென் மாவட்டங்களான மதுரை நெல்லை மற்றும் தூத்துக்குடியில் நேற்று மதியம் மழை பெய்தது. மதுரையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது. இதனால் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். நேற்று 104 டிகிரி வெயில் கொளுத்தியது.

இந்தநிலையில் மதியம் 3 மணி அளவில் மதுரையில் பல்வேறு இடங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. ஊமச்சிகுளம் பகுதியிலும் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்று வீசியதால் ஊமச்சிகுளம் கண்மாய் கரையோரம் நடப்பட்டிருந்த 2 மின் கம்பங்கள் சாய்ந்து நத்தம் மெயின் ரோட்டில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. வேறு அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நடக்கவில்லை.

இதேபோன்று, சிவகங்கை, காரைக்குடி, சிங்கம்புணரி ஆகிய நகரங்களில் காலைநேர கடும் வெயிலுக்குப்பின் பிற்பகலில் நல்ல மழை பெய்தது. இதனால் வெயில் தாக்கம் சற்று தணிந்தது. விருதுநகர் மாவட்டத்தில் பரவலாக நேற்று பிற்பகலில் சாரல் மழை பெய்தது.

தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 2 மணி அளவில் வானில் கரும்மேகம் திரண்டு தூத்துக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்தமழை பெய்தது. தூத்துக்குடியில் லேசான மழையே பெய்தது.

இதேபோன்று தென்திருப்பேரை, குறும்பூர், ஏரல் ஆகிய பகுதிகளில் மாலையில் இடி-மின்னல், சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்தன. நெல்லை மாவட்டத்தில் நேற்று பிற்பகலில் வெயில் குறைந்து, வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. நெல்லை உள்ளிட்ட ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்தது. குளிர்ந்த காற்று வீசியது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று காலையில் வெயில் கொளுத்தியது. மாலையில் வானில் கருமேகங்கள் சூழ்ந்து சத்தியமங்கலம், தாளவாடி, அம்மாபேட்டை, கொடுமுடி, ஊஞ்சலூர் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. மழைக்கு தாக்குப்பிடிக்காமல் சத்தியமங்கலம் பகுதியில் 2 தோட்டங்களில் பயிரிடப்பட்ட 1,500 வாழை மரங்கள் சாய்ந்தன. தாளவாடியில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதம் அடைந்தது.

சேலம் மாவட்டத்திலும் நேற்று மாலையில் பரவலாக மழை பெய்தது. தலைவாசலை அடுத்த சிறுவாச்சூர், அண்ணாநகர், சக்திநகர், இந்திராநகர், சாலையம்மன்நகர், காந்திநகர் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் பகுதியில் நேற்று மதியம் லேசான மழை பெய்தது. குன்னூரில் ஒருசில பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

கோவை மாவட்டம் வால்பாறை மற்றும் சரவணம்பட்டி, கணபதி, கோவில்பாளையம் பகுதியில் மதியம் ஒரு மணி நேரம் பலத்த காற்றுடன் மழை பெய்தது. திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. நேற்று மாலை 3 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. திண்டுக்கல்லில் மாலை 5.50 மணி அளவில் இடி-மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

இதேபோன்று கொடைரோடு, அம்மையநாயக்கனூர், நத்தம், வேடசந்தூர், பட்டிவீரன்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில், ஆரல்வாய்மொழி, தோவாளை, கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக நேற்று மழை பெய்தது. திருவண்ணாமலையில் நேற்று 106 டிகிரி வெயில் கொளுத்தியது. மாலை 6 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top