வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம் நடத்தினால் நிரந்தரமாக தொழில் செய்ய தடைவிதிக்கும் சட்டத் திருத்தம்; ஐகோர்ட்டு

10VBG_HIGH_COURT_305863f

நீதிபதிகளின் பெயரை சொல்லி கட்சிக்காரர்களிடம் பணம் வசூலிப்பது, நீதிபதிகளை அவதூறாக பேசுவது, குடிபோதையில் கோர்ட்டுக்கு வருவது போன்ற செயல்களை ஈடுபடும் வக்கீல்களை நிரந்தரமாக தொழில் செய்ய தடை விதிப்பதற்கு ஏற்ப வழக்கறிஞர் சட்டத்தில் சென்னை ஐகோர்ட்டு திருத்தம் கொண்டு வந்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் டி.ரவீந்திரன் ஒரு அறிவிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

வழக்கறிஞர் சட்டம் பிரிவு 34(1), அந்த சட்டத்தின் திருத்தம் கொண்டுவர ஐகோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கியுள்ளது. இதன்படி, தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அமைதியாக செயல்படவேண்டும் என்ற நோக்கத்திற்காக வழக்கறிஞர் சட்டத்தில் சில திருத்தங்களை ஐகோர்ட்டு கொண்டுவந்துள்ளது. வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-ஏ-வின் கீழ் குற்றச்செயல்களில் ஈடுபடும் வக்கீல்களை, நிரந்தரமாகவோ அல்லது குறிப்பிட்ட சில காலத்துக்கோ வக்கீல் செய்வதில் இருந்து நீக்கப்படுவார்கள்.

அதாவது கீழ்கண்ட குற்றங்களை செய்யும் வக்கீல்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்படும்.

* நீதிபதிகளின் பெயரை சொல்லி தன் கட்சிக்காரர்களிடம் இருந்து பணம் வசூலிப்பவர். நீதிபதியிடம் செல்வாக்கு உள்ளது என்று பொய் சொல்பவர்.

* நீதிமன்றங்களில் உத்தரவு மற்றும் ஆவணங்களை திருத்துபவர்கள். சேதப்படுத்தி அழிப்பவர்கள்.

* நீதிபதிகளை அவதூறாக, கேவலமாக பேசுபவர்.

* நீதிபதிகளுக்கு எதிராக ஏற்றுக் கொள்ள முடியாது, பொய்யான அவதூறான குற்றச்சாட்டுகளை சுமத்துபவர் அல்லது பரப்புபவர் அல்லது பொய்யான குற்றச்சாட்டுகளுடன் நீதிபதிக்கு எதிராக ஐகோர்ட்டு மற்றும் சுப்ரீம் கோர்ட்டுக்கு புகார்களை அனுப்பவர்.

* நீதிமன்ற வளாகத்துக்குள் போராட்டம், ஆர்ப்பாட்டம், ஊர்வலம் போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபடுபவர்கள். நீதிமன்ற அறைக்குள் முற்றுகையிட்டு கோஷம் போடுபவர்கள், பதாகைகளுடன் வருபவர்கள்.

* குடிபோதையில் நீதிமன்றங்களில் ஆஜராகி வாதிடுபவர்கள்.

மேற்சொன்ன செயல்களில் ஈடுபடும் வக்கீல்கள், ஐகோர்ட்டு மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள கீழ் கோர்ட்டுகளில் வக்கீல் தொழில் செய்ய நிரந்தரமாகவோ அல்லது தற்காலிகமாகவோ தடைவிதிக்கப்படும். இதன்பின்னர், நடவடிக்கைக்கு உள்ளான வக்கீல் குறித்த அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலுக்கு, ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் அனுப்பி வைப்பார்.

இவ்வாறு வக்கீல்கள் மீது நடவடிக்கை எடுக்க, வழக்கறிஞர் சட்டப்பிரிவு 14-பி வழிவகை செய்கிறது.

அதேபோல, மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டுகளில், மேற்சொன்ன குற்றச்செயல்களை வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த மாவட்டம் முழுவதிலும் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல் தொழில் செய்ய சம்பந்தப்பட்ட வக்கீல்களுக்கு தடை விதித்து, மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவு பிறப்பிக்கலாம். சார்பு நீதிமன்றங்கள், முன்சீப் அல்லது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டுகளில் மேற்சொன்ன செயல்களில் வக்கீல்கள் ஈடுபட்டால், அந்த சம்பவம் குறித்து அறிக்கையை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதிக்கு, சம்பந்தப்பட்ட கீழ் கோர்ட்டு நீதிபதி அனுப்பி வைக்கவேண்டும்.

அந்த அறிக்கையின் அடிப்படையில், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில், அந்த வக்கீல் ஆஜராக தற்காலிக தடைவிதித்து மாவட்ட முதன்மை நீதிபதி உத்தரவிடவேண்டும். அதன்பின்னர், சம்பந்தப்பட்ட வக்கீலுக்கு, அவர் செய்த குற்றச்செயல் குறித்து அவருக்கு தெரிவித்து, அவரது விளக்கத்தை கேட்டு சம்மன் அனுப்பவேண்டும். நீதிமன்றங்களில் ஆஜராக நிரந்தரமாக தடைவிதித்து இறுதி உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பு அவரது கருத்தை கேட்பது அவசியமாகும்.

அதன்பின்னர், அந்த வக்கீல் செய்ய குற்றச்செயல்களில் தன்மைக்கு ஏற்ப, ஐகோர்ட்டு உட்பட மாவட்ட கோர்ட்டுகளில் ஆஜராக நிரந்தர தடைவிதித்து மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு நீதிபதி உத்தரவிடலாம். இந்த புதிய சட்டத்திருத்தம், அறிவிக்கை வெளியிட்ட நாள் முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளன.

இந்த அறிவிக்கை கடந்த 20-ந் தேதி தலைமை பதிவாளர் வெளியிட்டுள்ளார். அதன்படி, இந்த புதிய சட்டத்திருத்தம் கடந்த 20-ந் தேதி முதல் அமலுக்கு வந்துவிட்டது. மேலும், இந்த சட்டத்திருத்தத்தை தமிழக அரசு தன்னுடைய அரசிதழிலும் வெளியிட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top