இனப்படுகொலைக்கான நினைவேந்தல்; அனைவருக்கும் மே பதினேழு இயக்கம் அழைப்பு

ninaivendal

2009 ஆம் ஆண்டு இனப்படுகொலைக்கு பின்னர் தொடர்ந்து அதனை நினைவு கூறும் வகையிலும், தமிழீழமே தீர்வு என்ற கோரிக்கையை வலியுறுத்தும் வகையிலும் ஒவ்வொரு ஆண்டும் நினைவேந்தல் நிகழ்வினை மே பதினேழு இயக்கம், மே மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை, சென்னை மெரினாவில் நடத்தி வருகிறது. ஒவ்வொரு வருடமும் பரவலான மக்கள் அதில் கலந்து கொண்டு ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்காகவும், போராளிகளுக்காகவும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவேந்துவர். இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காரணமாக நினைவேந்தல் நிகழ்வு மே மாதம் 29 ஆம் தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டது. அதற்கான பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடைபெற்றது. இதனை தமிழர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் திருமுருகன்காந்தி, லெனாகுமார் மற்றும் பிரவீன் குமார் ஆகியோர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டார்கள்.

அதில் பேசிய மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன்காந்தி “1,46,679 தமிழர்களை படுகொலை செய்து ஒரு மிகப் பெரிய இனப்படுகொலையை இலங்கை அரசாங்கம் கடந்த 2009 ஆம் ஆண்டில் செய்தது. 2009 க்குப் பிறகு எத்தனை பேர் படுகொலை செய்யப்பட்டார்கள் என்ற விவரங்கள் எல்லாம் கணக்கிடப்படவே இல்லை. ஏழு ஆண்டுகள் கடந்த பின்னும் இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலை இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக பிரேமன் நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் பகிரங்கமாக அறிவித்தது. இந்த இனப்படுகொலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கூட்டாளிகளாக செயல்படுகின்றன என்றும் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது. இது குறித்து இந்த நாடுகள் கள்ள மவுனத்தைக் காத்து வருகின்றன” என்று கூறினார்.

மேலும், “கடந்த பிப்ரவரி மாதம் இலங்கைக்கு பயணம் செய்த ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்த் அல் ஹுசைன் இலங்கையின் இறையாண்மைக்கு எதிராக ஐ.நா ஒருபோதும் செயல்படாது என்றும், இலங்கையின் வளர்சிக்காகவே ஐ.நா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்று ஒரு அயோக்கியத்தனமான பேட்டியினை கொடுத்துள்ளார். மேலும் போர்க் கைதிகளை போர்க் கைதிகள் என்று குறிப்பிடாமல், அரசியல் கைதிகள் என்று குறிப்பிட்டதன் மூலம் அவர்களின் விடுதலைக்கு தடையை உருவாக்கி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகப் பெரிய துரோகத்தினை ஐ.நா மனித உரிமை ஆணையர் செய்து கொண்டிருக்கிறார். ஐ.நா மனித உரிமை ஆணையர் அல் ஹூசைன் கொலைகாரர்களுக்கு ஆதரவாகவும், தமிழர்களுக்கு எதிராகவும் செயல்படுகிறார்” என்று குற்றம்சாட்டினார்.

தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலை என்பது அங்கீகரிக்கப் பட வேண்டும். இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை இலங்கை அரசின் மீது நடத்தப்பட வேண்டும். தமிழீழத்திற்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட்டு, தமிழீழ விடுதலை அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கைக்கு ஆதரவாக செயல்படும் ஐ.நா மனித உரிமை ஆணையர் அல் ஹூசைனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இனப்படுகொலையில் பங்கெடுத்த இந்திய அதிகாரிகளான எம்.கே நாராயணன், சிவ சங்கர் மேனன், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோர் மீது சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும். இனப்படுகொலையின் கூட்டாளிகளாக செயல்பட்ட அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, பாகிஸ்தான் அதிகாரிகள் மீதும் சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை மையப்படுத்தியே நினைவேந்தல் நடைபெறுவதாகவும், தமிழ் அரசியல் கட்சிகள், இயக்கங்களின் தலைவர்கள் மற்றும் தோழர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என்று அனைத்து தரப்ப்பு மக்களுக்கும் குடும்பத்துடன் வந்து நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பதினேழு இயக்கம் அழைப்புவிடுத்துள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top