ஐ.பி.எல். சீசன் 9: குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது ஆர்.சி.பி.

201605250013146621_RCB-Beats-Gujarat-then-RCB-book-their-spot-in-the-final_SECVPFஐ.பி.எல். சீசன் 9-ன் முதல் குவாலிபையர் சுற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு நடைபெற்றது. இதில் புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்த குஜராத் லயன்ஸ் அணியும், 2-வது இடம் பிடித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் வென்ற பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். அதன்படி முதலில் களம் இறங்கிய குஜராத் அணி 9 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுக்களை இழந்தது. பிஞ்ச் (4), மெக்கல்லம் (1), ரெய்னா (1) ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். 5-வது நபராக களம் இறங்கிய வெயின் ஸ்மித் அதிரடியாக விளையாடி 41 பந்தில் 5 பவுண்டரி, 6 சிக்சருடன் 73 ரன்கள் குவித்தார்.

ஸ்மித் ஆட்டத்தால் குஜராத் லயன்ஸ் அணி 158 ரன்கள் சேர்த்து ஆல் அவுட் ஆனது. பெங்களூர் அணியின் வாட்சன் அதிகபட்சமாக 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

பின்னர் 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் விராட் கோலி தான் சந்தித்த 2-வது பந்தில் டக் அவுட் ஆகி அதர்ச்சி அளித்தார். விராட் கோலியை வீழ்த்திய தவால் குல்கர்னி பந்தில் அனல் பறந்தது. விராட் கோலியைத் தொடர்ந்து கெய்ல் (9), ராகுல் (0), சச்சின் பேபி (0), ஆகியோரையும் வெளியேற்றினார். மற்றொரு முனையில் வாட்சன் 1 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜா பந்தில் ஆட்டம் இழந்தார்.

இதனால் பெங்களூர் அணி 29 ரன்கள் எடுப்பதற்குள் 5 முக்கிய விக்கெட்டுக்களை இழந்தது. இதனால் பெங்களூர் அணி தோற்றுவிடும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஆனால், டி வி்ல்லியர்ஸ் மட்டும் மைதானத்தில் நின்றிருந்தார். அதனால் பெங்களூர் ரசிகர்கள் மட்டும் நம்பிக்கையில் இருந்தனர்.

6-வது விக்கெட்டுக்கு வில்லியர்ஸ் உடன் ஸ்டூவர்ட் பின்னி ஜோடி சேர்ந்தார். ஜகாதி வீசிய 9-வது ஓவரில் பின்னி 2 பவுண்டரி, 1 சிக்சர் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 18 ரன்கள் கிடைத்தது. ஆனால், அடுத்த ஓவரில் பின்னி அவுட் ஆனார். அவர் 15 பந்தில் 21 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து இக்பால் அப்துல்லா டி வில்லியர்ஸ் உடன் ஜோடி சேர்ந்தார். அப்துல்லா நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி மைதானத்திற்குள் நிலைத்து நின்றார். அதிரடியாக விளையாடவில்லை என்றாலும், பந்துக்கு பந்து ஒரு ரன் எடுத்து டி வில்லியர்ஸ்க்கு ஒத்துழைப்பு கொடுத்தார். டி வில்லியர்ஸ் அடிக்கக்கூடிய பந்தை மட்டும் தேர்வு செய்து பவுண்டரி, சிக்சருக்கு விளாசினார்.

சிறப்பாக விளையாடிய டி வில்லியர்ஸ் 33 பந்தில் அரைசதம் அடித்தார். ஸ்மித் வீசிய 15-வது ஓவரில் டி வில்லியர்ஸ் 11 ரன்கள் அடித்தார். அடுத்த ஓவரில் டி வில்லியர்ஸ், அப்துல்லா தலா ஒரு சிக்ஸ் அடித்தனர். அதன்பின் பெங்களூர் பக்கம் ஆட்டம் திரும்பியது.

பிராவோ வீசிய 18-வது ஓவரில் இக்பால் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் அடித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். 19-வது ஓவரின் 2-வது பந்தில் 2 ரன்கள் எடுத்ததன் மூலம் பெங்களூர் அணி 18.2 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

டி வில்லியர்ஸ் 46 பந்தில் 5 பவுண்டரி, 5 சிக்சருடன் 78 ரன்கள் எடுத்தும், அப்துல்லா 24 பந்தில் 3 பவுண்டரி, 1 சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தும் அவுட்டாகாமல் வெற்றிக்கு உதவினார்கள். குஜராத் அணி சார்பில் அதிகபட்சமாக குல்கர்னி 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top