முஸ்லிம்களின் நோன்பு காலத்தில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் இடைத்தேர்தலை நடத்தக் கூடாது: எஸ்.டி.பி.ஐ. கட்சி கோரிக்கை

Aravakurichi-Thanjavur-Muslim-fasting-period-can-not-conduct_SECVPF

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெகலான் பாகவி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–

கடந்த மே 16–ந்தேதி தமிழக சட்டசபை தேர்தல் அனைத்து தொகுதிகளிலும் நடந்த நிலையில், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தலை மட்டும் அந்த தொகுதிகளில் பணப்பட்டுவாடா அதிகமாக நடந்ததாகக் கூறி, அந்த தொகுதிகளில் மே 23–ல் தேர்தலை நடத்துவதாக அறிவித்து விட்டு, பிறகு மீண்டும் ஜூன் 13–ல் தேர்தல் நடைபெறும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

முஸ்லீம்களின் நோன்பு காலமான ரமலான் மாதம் ஜூன் 6–ம் தேதி துவங்க உள்ள நிலையில், நோன்பு காலத்தில் இத்தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது கண்டனத்திற்குரியது.

அரவக்குறிச்சியில் 35 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும், தஞ்சாவூரில் 25 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களும் உள்ள நிலையில், நோன்பு நேரத்தில் முஸ்லிம்கள் வாக்களிக்க செல்வதற்கும் தேர்தல் பணியில் ஈடுபடுவதற்கும் பெருத்த சிரமத்தை இது ஏற்படுத்தும். இதுபற்றி தேர்தல் கமிஷனுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் சார்பாக தேர்தலை நோன்பு காலத்திற்கு முன்போ அல்லது பின்போ நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம்.

தேர்தல் ஆணையம் இக்கோரிக்கையை ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன். உடனடியாக இக்கோரிக்கையை பரிசீலித்து, தேர்தல் ஆணையம் தனது நிலையை மாற்றிக்கொள்ளா விட்டால் எஸ்.டி.பி.ஐ. கட்சி உயர் நீதிமன்றத்தை அணுகும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top