25–ந்தேதி பதவியேற்பு விழா: பினராயி விஜயன் அமைச்சரவையில் 19 பேருக்கு மந்திரி பதவி

201605231734087658_Pinarayi-Vijayan-Government-In-Kerala-To-Have-19-Ministers_SECVPFகேரளாவில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஆளும் கட்சியாக இருந்த காங்கிரசை வீழ்த்திவிட்டு கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியை பிடித்துள்ளது.

புதிய முதல்–மந்திரியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பினராயி விஜயன் தேர்தெடுக்கப்பட்டுள்ளார். இதை தொடர்ந்து மந்திரிசபையில் இடம்பெறுபவர்களை தேர்வு செய்யும் கூட்டம் திருவனந்தபுரத்தில் பினராயி விஜயன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முன்னாள் முதல்–மந்திரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான அச்சுதானந்தன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 12 பேருக்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 4 பேருக்கும் கூட்டணி கட்சிகளான ஜனதாதளம் – 1, என்.சி.பி. – 1, கேரள காங்கிரஸ் (எஸ்) – 1 ஆகிய 19 பேருக்கு மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் தோமஸ் ஐசக், ஜெயராஜன், சுதாகரன், பாலன், மேழ்சி குட்டி, சுரேந்திரன், சைலஜா, ராமகிருஷ்ணா, மொய்தீன், ஜலீல், ரவீந்திரபிரசாத், ஸ்ரீராமகிருஷ்ணன் ஆகியோர் மந்திரிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேர் பெண்கள் ஆகும்.

கூட்டணி கட்சிகளின் மந்திரி பட்டியல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இந்த முறை உள்துறைக்கு என்று தனியாக மந்திரியை நியமிக்காமல் அந்த துறையை முதல்–மந்திரி பினராயி விஜயனே கவனிப்பார் என்று கூறப்படுகிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரான அச்சுதானந்தன் இந்த முறையும் தனக்கு முதல் – மந்திரி பதவி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார் ஆனால் அவரது முதுமையை காரணம் காட்டி அவருக்கு அந்த பதவி வழங்கப்படவில்லை. இதனால் அதிருப்தியில் உள்ள அவரை சமாதானப்படுத்த கம்யூனிஸ்டு ஆட்சி நடக்கும் கியூபாவில் முன்னாள் அதிபரான பிடல்காஸ்ட்ரோவுக்கு வழங்கப்பட்டுள்ளது போல சிறப்பு அதிபர் மரியாதை அச்சுதானந்தனுக்கு வழங்கப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் சீதாராம் யெச்சூரி அறிவித்திருந்தார். ஆனாலும் அச்சுதானந்தன் ஆதரவாளர்கள் சமாதானம் அடையவில்லை.

மந்திரிகளை தேர்வு செய்யும் கூட்டம் முடிந்து அச்சுதானந்தன் வெளியே வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அச்சுதானந்தனை ஆதரித்து கோஷங்களை எழுப்பினார்கள். அவர்கள் மத்தியில் அச்சுதானந்தன் பேசும் போது தேர்தலுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நான் முதுமை அடைந்துவிட்டேனா என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு அவரது ஆதரவாளர்கள் இல்லை… இல்லை… நீங்கள் இளமையாக தான் இருக்கிறீர்கள் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பினராயி விஜயன் தலைமையிலான புதிய மந்திரிசபை வருகிற 25–ந் தேதி பதவியேற்கிறது. கவர்னர் சதாசிவம் அவர்களுக்கு பதவி பிரமானம் செய்து வைக்கிறார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top