ஸ்மித்-4வி/8; ரெய்னா 53* பிளே ஆஃப் வாய்ப்பை நெருங்கியது குஜராத்

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 51-ஆவது லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைத் தோற்கடித்தது குஜராத் லயன்ஸ்.
48

 

இதன்மூலம் 8-ஆவது வெற்றியைப் பெற்ற குஜராத், புள்ளிகள் பட்டியலில் 2-ஆவது இடத்துக்கு முன்னேறியதோடு, பிளே ஆஃப் வாய்ப்பையும் நெருங்கியுள்ளது.
குஜராத் அணியின் டுவைன் ஸ்மித் 4 ஓவர்களில் 8 ரன்களை மட்டுமே கொடுத்து கொல்கத்தாவின் முன்னணி பேட்ஸ்மேன்களான மணீஷ் பாண்டே, உத்தப்பா உள்ளிட்ட 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் கேப்டன் ரெய்னா பீல்டிங்கை தேர்வு செய்தார்.
இதையடுத்து பேட் செய்த கொல்கத்தா அணியில் கேப்டன் கம்பீர் 8 ரன்களில் ரன் அவுட்டானார். இதன்மூலம் டி20 போட்டியில் அதிக முறை (21) ரன் அவுட்டானவர்கள் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தார் கம்பீர்.
பின்னர் வந்த பாண்டே 1 ரன் எடுத்த நிலையில் ஸ்மித் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, பியூஷ் சாவ்லா களம்புகுந்தார். ஒருபுறம் விக்கெட் விழுந்தாலும், மறுமுனையில் வேகம் காட்டிய உத்தப்பா 19 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்மித் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் கார்த்திக்கிடம் கேட்ச் ஆனார்.
இதன்பிறகு 10-ஆவது ஓவரை வீசிய ஸ்மித், பியூஷ் சாவ்லாவை (11) போல்டாக்கினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷகிப் அல்ஹசன் 3 ரன்களில் வெளியேற, யூசுப் பதானுடன் இணைந்தார் சூர்யகுமார் யாதவ். இந்த ஜோடி 6-ஆவது விக்கெட்டுக்கு 41 ரன்கள் சேர்க்க, கொல்கத்தா 100 ரன்களை கடந்தது. சூர்யகுமார் 14 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து வெளியேறினார்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும், மறுமுனையில் தனிநபராகப் போராடிய யூசுப் பதான் 36 பந்துகளில் 1 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 36 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 124 ரன்கள் சேர்த்தது கொல்கத்தா.
குஜராத் வெற்றி: பின்னர் ஆடிய குஜராத் அணியில் டுவைன் ஸ்மித் ரன் ஏதுமின்றியும், மெக்கல்லம் 6 ரன்களிலும், தினேஷ் கார்த்திக் 12 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஆனால் கேப்டன் ரெய்னா அசத்தலாக ஆட, குஜராத்தின் வெற்றி எளிதானது. ஆரோன் ஃபிஞ்ச் 26 ரன்களில் ஆட்டமிழக்க, ஜடேஜா களம்புகுந்தார்.

இதனிடையே ரெய்னா 33 பந்துகளில் அரை சதத்தை எட்ட, 13.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 125 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது குஜராத். ரெய்னா 36 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 53, ஜடேஜா 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஸ்மித் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top