திரிணமூல் – பாஜக ரகசிய கூட்டணியால் மேற்கு வங்கத்துக்கு ஆபத்து: மார்க்சிஸ்ட்

திரிணமூல் காங்கிரஸ் – பாஜக ரகசியக் கூட்டணியால் மேற்கு வங்கத்துக்கு பெரும் ஆபத்து காத்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சூரியகாந்த மிஸ்ரா கூறினார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 210 இடங்களைக் கைப்பற்றி திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இத்தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் – காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்துள்ளது.
இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சூரியகாந்த மிஸ்ரா, கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பை ஏற்கிறோம். ஆளுங்கட்சியினரின் அச்சுறுத்தலையும் மீறி எங்களுக்கு ஆதரவு அளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேசமயத்தில், தேர்தல் தோல்வியால் துவண்டுவிடாமல், மேற்கு வங்கத்தில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நாங்கள் பாடுபடுவோம்.
தேர்தல் முடிவால் காங்கிரஸ் – மார்கிசிஸ்ட் கம்யூனிஸ்ட் கூட்டணி தோற்றுவிட்டது எனக் கூற முடியாது. எனினும், இந்தத் தோல்வி குறித்து விரிவான ஆய்வு செய்ய வேண்டியுள்ளது.
பாஜகவும், திரிணமூல் காங்கிரஸும் இத்தேர்தலில் ரகசியக் கூட்டணி வைத்திருந்தன. காரக்பூர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் பாஜகவினருக்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும், திரிணமூல் காங்கிரஸுக்கு பாஜகவினரும் மாறி மாறி வாக்களித்துள்ளனர்.
மேற்கு வங்கத்தில் ஜனநாயகம் தொடர்ந்து தாக்குதலுக்குள்ளாகி வருகிறது. முக்கியமாக, பாஜக – திரிணமூல் ரகசிய கூட்டணியால் மேற்கு வங்கத்துக்கு பெரும் ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது என்றார் சூரியகாந்த மிஸ்ரா.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top