தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் : வானிலை ஆய்வு மையம்

rain

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தற்போது ஆந்திர கடல் பகுதிக்கு நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறினார். தமிழகம் முழுவதும் கடந்த மூன்று நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழை விடாமல் இரவு முழுவதும் பெய்தது.

இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது ஆழ்ந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையாக ஆந்திர கடல் பகுதியில் நிலைக் கொண்டுள்ளது. நெல்லூருக்கு கிழக்கே 140 கி.மீ தொலைவில் அது இருக்கிறது. அடுத்த 12 மணி நேரத்தில் அது புயலாக மாறுவதற்கும் வாய்ப்புள்ளது.

மேலும், அது வடக்கு மற்றும் வடகிழக்கு ஆந்திரா மற்றும் ஒரிசா கடற்கரை நோக்கி நகரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. காற்றழுத்த தாழ்வு நிலை, ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளதால் தமிழகத்தில் மழை படிப்படியாக குறையும். வடதமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்யும். சென்னை சாரல் மழையும் சில சமயங்களில் மிதமான மழையும் பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.

கடந்த 12 மணி நேரத்தில் அதிகபட்சமாக பூவிருந்தமல்லி, சோழவரத்தில் 7 செ.மீட்டரும், தாமரைப்பாக்கம், செங்குன்றத்தில் 6 செ.மீட்டரும் பொன்னேரியில் 4 செ.மீட்டரும், சென்னை நகரில் 3 செ.மீ மழையும் பதிவாகி உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழகம் மற்றும் ஆந்திர பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர் என்று வானிலை ஆய்வு மைய இயக்குநர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top