இந்திய ராணுவ வீரர்தான் பாலியல் தொந்தரவு கொடுத்தார்: போலீஸார் அச்சுறுத்தினர்-காஷ்மீர் பள்ளி மாணவி மீண்டும் குற்றச்சாட்டு

kashmiri girl

கடந்த மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ வீரர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறி அதை மறுத்திருந்த பள்ளி மாணவி, மீண்டும் ராணுவ வீரர் மீது அந்தக் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அத்துடன் தடுப்புக் காவலில் இருந்தபோது போலீஸார் தன்னை அச்சுறுத்தியதாகவும் அந்த மாணவி தெரிவித்துள்ளார்.

குப்வாரா மாவட்டம் ஹண்ட்வாரா நகரில் ராணுவ வீரர் ஒருவர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக ஒரு பள்ளி மாணவி கடந்த மாதம் புகார் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுமார் ஒரு வாரம் நீடித்த இந்தப் போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக அந்த மாணவியை தடுப்புக் காவலில் வைத்து போலீஸார் விசாரித்தனர். அப்போது, 2 இளைஞர்கள்தான் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தனர் என்று அந்த மாணவி கூறியதாக தகவல் வெளியானது.

இந்த சம்பவம் தொடர்பாக தடுப்புக் காவலில் வைத்து விசாரிக் கப்பட்டு வந்த அந்த 16 வயது மாணவி கடந்த 12-ம் தேதி விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அந்த மாணவி நகரில் முதன்முறை யாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கழிவறையிலிருந்து வெளியில் வந்தபோது, ராணுவ சீருடையில் இருந்த ஒருவர் வலுக்கட்டாயமாக எனது கையைப் பிடித்துக் கொண் டார். அப்போது கூச்சலிட்டபடி நான் தப்பி ஓடிவிட்டேன்.

மேலும் இது தொடர்பான விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைத்திருந்தபோது போலீஸார் என்னை அச்சுறுத்தி, துன்புறுத்தினர். குறிப்பாக மோசின் என்பவர் கடுமையான வார்த்தை களால் திட்டினார். பின்னர் ஜீலானி என்பவர் எனது வாக்குமூலத்தை பதிவு செய்தார். அப்போது உண்மையை வெளியில் சொல்ல மாட்டேன் என்று உறுதி கூறினார்.

அவர்கள் கொடுத்த அழுத்தம் காரணமாக, ராணுவத்தினர் மீது குற்றம்சாட்டாமல் எனது வாக்கு மூலத்தை பதிவு செய்தேன். ஆனால், எனது வாக்குமூலத்தை வெளியிட்டு விட்டனர். ராணுவ வீரரை காப்பாற்றுவதற்காக எனது மரியாதை, கவுரவத்தை கேள்விக்குறியாக்கினர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதனிடையே, தன்னுடைய வாக்குமூலம் அடங்கிய வீடியோ காட்சியை வெளியிட்டது மற்றும் சட்டவிரோதமாக தடுப்புக் காவலில் வைத்தது தொடர்பாக அந்த மாணவி போலீஸில் புகார் செய்தார். அப்போது அவருடன் தந்தையும், தாயும் வந்திருந்தனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top