பொருளாதார தேக்க நிலையை மீட்க அரசியல் மாற்றம் அவசியமானது : டி. ராஜா

d-raja_28

தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையை மீட்க அரசியல் மாற்றம் அவசியமானது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலர் டி. ராஜா.

நாகப்பட்டினத்தில் அந்தக் கட்சியின் நாகை தொகுதி வேட்பாளர் ஏ.பி. தமிம் அன்சாரியை ஆதரித்து சனிக்கிழமை பிரசாரம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். இதனால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசிடம் தொடர்ந்து முறையிட்டும், உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், நொந்துபோய் தற்கொலை செய்யும் நிலைக்கு மீனவர்கள் தள்ளப்படுகின்றனர். கடற்கரையோர மக்களிடம் உள்ள அதே கோபம், தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப் பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்தலுக்குப் பிறகு தொகுதிகளில் பார்க்க முடிவதில்லை. தமிழகத்தில் திராவிடக் கட்சிகளால் ஏற்பட்ட பொருளாதார தேக்க நிலையை மீட்க அரசியல் மாற்றம் அவசியமானது.திமுக, அதிமுக அல்லாத மாற்று அணி அவசியம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். பணபலத்தை வைத்து மக்களின் வாக்குரிமையை பறித்து விடலாம் என திமுகவும், அதிமுகவும் நினைக்கின்றன. கொள்கை எதுவும் இல்லாததால் பணம் கொடுத்து வெற்றி பெற திராவிடக் கட்சிகள் துடிக்கின்றன. தமிழ்நாட்டில் பணப்பட்டுவாடா அதிகம் நடைபெறுகிறது என தேர்தல் ஆணையமே ஒப்புக் கொள்கிறது. என்றாலும் தமிழக மக்கள் பணபலத்துக்கு பணிய மாட்டார்கள் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நம்புகிறது.

தமிழக அரசியல் களத்தில் பாஜக தலைதூக்க முயல்கிறது. பாஜக வெற்றி பெற்றால் மதவெறி அரசியலை முன்வைக்கும். எனவே, பாஜகவை மக்கள் நிராகரிக்க வேண்டும். புதிய வாக்காளர்கள் ஆட்சி மாற்றத்தை விரும்புகின்றனர். சுதந்திரமான, நேர்மையான தேர்தல் நடத்தும் பொறுப்பு தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. ஒருதலைபட்சமாக தேர்தல் ஆணையம் செயல்படுமேயானால் அதன் நம்பகத்தன்மை கேள்விக்குரியாக மாறுவதுடன், தனது கடமையில் இருந்து தவறுகிறது என நினைக்கத்தோன்றும் என்றார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top