காங்கிரஸ் கட்சியின் 3 பரிந்துரைகளை ஏற்றால் ஜிஎஸ்டி மசோதாவை ஆதரிக்கத் தயார்: காங்கிரஸ்

jairam-ramesh

 

காங்கிரஸ் கட்சியின் 3 பரிந்துரைகளை மத்திய அரசு ஏற்றுக் கொண்டால் சரக்கு – சேவை வரி மசோதாவை (ஜிஎஸ்டி மசோதா) ஆதரிக்கத் தயார் என்று அக்கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் கூறினார்.

மாநிலங்களவையில் புதன்கிழமை நடைபெற்ற “நிதி மசோதா’ மீதான விவாதத்தின்போது அவர் மேலும் பேசியதாவது:
மாநிலங்களவையில் ஜிஎஸ்டி மசோதா நிறைவேற்றப்பட வேண்டும் என்றே காங்கிரஸ் கட்சி விரும்புகிறது. அந்த மசோதாவில் சேர்க்குமாறு 3 முக்கிய பரிந்துரைகளை நாங்கள் முன்வைத்துள்ளோம். வரி தொடர்பான சட்ட விவகாரங்களை விசாரிப்பதற்கு அரசியலுக்கு அப்பாற்பட்ட சுதந்திரமான குழுவை நியமிக்க வேண்டும் என்பது அந்தப் பரிந்துரைகளில் ஒன்றாகும். இரண்டாவதாக, சரக்குகளை ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு கொண்டு செல்லும்போது விதிக்கப்படும் ஒரு சதவீத வரியை நீக்க வேண்டும். மூன்றாவதாக, ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்பதாகும்.

ஆனால், அந்தப் பரிந்துரைகளை ஏற்காமல் மத்திய அரசு பிடிவாதம் காட்டுகிறது. ஜிஎஸ்டி மசோதாவுக்கு உண்மையான எதிர்ப்பு, மத்திய அரசிடம் இருந்துதான் வருகிறது; காங்கிரஸ் தரப்பில் இல்லை. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.5 சதவீதமாக உள்ளது என்று மத்திய அரசு கூறி வருகிறது. ஆனால், அதை நாட்டின் தலைமைப் பொருளாதார ஆலோசகர், ரிசர்வ் வங்கி ஆளுநர், லண்டன் பொருளாதார அறிஞர்கள் நம்பவில்லை.

நாட்டின் வளர்ச்சியை யாரும் மறுக்கவில்லை. அரசு தரும் புள்ளிவிவரம்தான் சந்தேகத்தை எழுப்புகிறது. நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதத்துக்குள் இருக்கவே வாய்ப்புள்ளது. 7.5 ஆக இருக்க வாய்ப்பில்லை. எனவே, நாட்டின் உண்மையான ஜிடிபியைக் கண்டறிவதற்கு பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தலைமையிலான குழுவை அரசு நியமிக்க வேண்டும்.
அடுத்ததாக, வாராக் கடன்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளில் குறிப்பிட்ட சிலர் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கக் கூடாது.
மேலும், குஜராத் மாநில பெட்ரோலியக் கழகத்தின் கிருஷ்ணா-கோதாவரி படுகை எரிவாயுத் திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளதால், அதுதொடர்பாக விசாரணைக்கு அரசு உத்தரவிட வேண்டும் என்றார் அவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top