இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதற்கு காரணம் என்ன? விசாரணை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவு

30-1462000962-rajesh-lakhani-12-600

இரவு நேரத்தில் மின் தடை ஏற்படுவதற்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை நடத்தும்படி தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து ராஜேஷ் லக்கானி கூறியதாவது:-

கடந்த சில நாள்களாக காணொலிக் காட்சி மூலம் தொடர் ஆலோசனைகளை தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி நடத்தி வருகிறார். திங்கள்கிழமையன்று தலைமைச் செயலர், டிஜிபி, உள்துறை செயலர் போன்ற உயர் அதிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார். செவ்வாய், புதன் ஆகிய இரு தினங்களிலும் தலா 16 மாவட்டங்களைச் சேர்ந்த தேர்தல் பார்வையாளர்களுடன் ஆலோசித்தார். புதன்கிழமையன்று சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுடன் ஆலோசிக்கும் போது, நகரின் பல்வேறு பகுதிகளில் திடீரென மின்தடை செய்யப்படுவதாகவும், அந்த நேரத்தில் பண விநியோகம் செய்ய திட்டமிட்டிருப்பதாகவும் புகார்கள் வந்துள்ளதாகத் தெரிவித்தார்.இதுகுறித்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என நஜீம் ஜைதி உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, தமிழக அரசின் எரிசக்தித் துறை செயலாளர், மின்வாரியத் தலைவர் ஆகியோரிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளது. அதிகாரிகளிடம் இருந்து விளக்கங்கள் பெறப்பட்டு அவை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்படும் என்றார் ராஜேஷ் லக்கானி.

இரவு நேரத்தில் மின் விநியோகம் தடை பட்டதற்கு தமிழ்நாடு மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் முக்கியப் பகுதிகளான நுங்கம்பாக்கம், ஆயிரம் விளக்கு, கே.கே.நகர், கோடம்பாக்கம், அசோக் நகர், வடபழனி, வளசரவாக்கம், அரும்பாக்கம், தியாகராய நகர், மேற்கு மாம்பலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை இரவு மின்விநியோகம் தடைபட்டது. இதனால், மக்கள் பாதிப்புக்கு ஆளாகினர்.
இதற்கு மின்சார வாரியம் புதன்கிழமை அளித்த விளக்கம்:-
சென்னை கோயம்பேடு துணை மின் நிலையத்தில் உள்ள மின்னூற்றுச் சட்டத்தில் செவ்வாய்க்கிழமை இரவில் தீப்பிழம்பு ஏற்பட்டது.
இதையடுத்து, தீ அதிக இடங்களுக்கு பரவாமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கையாக இரண்டு மின்மாற்றிகளின் செயல்பாடு நிறுத்தப்பட்டது. இதனால் சுமார் 40 நிமிடங்கள் வரை மின்தடை ஏற்பட்டது.
தீ விபத்து தவிர்க்கப்பட்டு, தீ முழுவதுமாக அணைக்கப்பட்ட பின்பு நிறுத்தம் செய்யப்பட்டிருந்த மின்மாற்றிகள் செயல்பாட்டுக்கு வந்தன.
சேதமடைந்திருந்த மின்னூற்றுச் சட்டம் மாற்றி அமைக்கப்பட்டு, குறிப்பிட்ட மின்மாற்றியும் செயல்படத் தொடங்கிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top