வங்கதேசத்தில் ஜமாத் இ இஸ்லாமி தலைவர் மோதியூர் ரஹ்மான் நிசாமி தூக்கிலிடப்பட்டதை கண்டித்து இன்று நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 1971-ல் வங்கதேசம் போரிட்டது. அப்போது போர் குற்றங்களில் ஈடுபட்டதாக மோதியூர் ரஹ்மான் நிசாமி மீது குற்றம்சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த வங்கதேச நீதி மன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்தது. அதன் அடிப்படையில் அவருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் வங்கதேச அரசின் இந்நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து ஜமாத் இ இஸ்லாமி சார்பில் வெளியிடப்பட்ட அறிக் கையில், ‘‘73 வயது முதியவரான நிசாமிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது திட்டமிட்ட படுகொலையாகும். இதை கண்டித்து நாளை (இன்று) முழு அடைப்பு போராட்டம் நடத்தப் படும். போராட்டத்துக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நிசாமியின் உடல் பப்னா சாத்தி யாவில் உள்ள அவரது சொந்த கிராமத்தில் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. போர் குற்றங்கள் தொடர்பாக நிசாமி உட்பட இதுவரை 5 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள் ளது.