தேர்தல் ஆணையம் கெடுபிடி காரணமாக அட்சய திருதியை நாளில் தங்கம் விற்பனை வெகுவாக குறைந்தது

j

தேர்தல் ஆணையம் கெடுபிடி காரணமாக அட்சய திருதியை நாளில் கடந்த ஆண்டைவிட தங்கம் விற்பனை வெகுவாக குறைந்தது. கடைகள் வெறிச்சோடியதால் வியாபாரிகள் கவலை அடைந்துள்ளனர்.

‘அட்சய திருதியை’ முன்னிட்டு தங்கம் விற்பனை எவ்வளவு என்பது குறித்து, சென்னை தங்கம்- வைர வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஜலானி, ‘கூறியதாவது:-

தமிழகத்தில் 12 ஆயிரம் பெரிய நகை கடைகளும், 10 ஆயிரம் சிறிய நகை கடைகளும் உள்ளன. இதில் சென்னையில் மட்டும் 6 ஆயிரம் முதல் 6 ஆயிரத்து 500 நகை கடைகள் உள்ளன. சாதாரண நாட்களை விட விழாக்காலங்களில் நகைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

அட்சய திருதியை நாளில் தங்க நகைகள் வாங்கினால், வீட்டில் தங்கம் பெருகும் என்ற எண்ணம் காரணமாக அன்றைய தினத்தில் தங்கம் விற்பனை அதிகமாக இருக்கும். மாநிலம் முழுவதும் தினசரி 1,200 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. இதில் சென்னையில் விற்பனை செய்யப்படும் 300 கிலோ தங்கமும் அடக்கமாகும். ஆனால் அட்சய திருதியையொட்டி சென்னையில் நேற்று 500 கிலோ தங்கம் விற்பனையாகி உள்ளது.

மாநிலம் முழுவதும் சராசரியாக விற்பனை செய்யப்படும் அளவைவிட சற்று அதிகரித்து, தோராயமாக 1,600 கிலோ தங்கம் விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 15 முதல் 30 சதவீதம் வரை விற்பனை குறைந்துள்ளது. இன்று (நேற்று) காலையை விட மாலையில் பவுனுக்கு ரூ.88 குறைந்ததால், காலையில் மந்தமாக இருந்த விற்பனை மாலையில் சற்று சூடுபிடித்தது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால் உரிய ஆவணமின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் கொண்டு சென்றால், தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து அவற்றை அரசு கருவூலத்தில் செலுத்திவிடுவார்கள் என்ற அச்சத்தால் பொதுமக்கள் நகை வாங்குவதை இந்த ஆண்டு தவிர்த்து உள்ளனர்.

தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் அதிக கெடுபிடி காண்பிப்பதால், கடைகளில் வந்து நாங்கள் தேர்வு செய்யும் நகைகளை, வீடுகளுக்கே கொண்டுவந்து தந்துவிட்டு பணத்தை வாங்கி செல்லுங்கள் என்று பல வாடிக்கையாளர்கள் எங்களிடம் கூறுகிறார்கள். அட்சய திருதியை போன்ற நாட்களில் நகைகளை வீடுகளுக்கு கொண்டு சென்று ‘டோர் டெலிவரி’ செய்ய இயலாது என்று கூறியதாலும் விற்பனை குறைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் நலன் கருதி கூடுதல் கடைகளை திறந்து விற்பனையில் ஈடுபட்டோம். ஆனாலும் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லாததால் கவலை அளிக்கிறது. பொதுமக்களுக்கும் அட்சய திருதியை அன்று நகை வாங்க முடியவில்லையே என்ற மனகுறையும் எற்பட்டுள்ளதை தொலைபேசி மூலமாகவும் பல வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

நகை வாங்க வரும் பொதுமக்களிடம் தேர்தல் பறக்கும் படையினர் அதிக கெடுபிடி காட்ட வேண்டாம் என்று எங்கள் சங்கம் சார்பில் தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கும் கொண்டு சென்றோம். ஆனால் எதுவும் பலனளிக்கவில்லை. விற்பனையும் வெகுவாக குறைந்தது.

இவ்வாறு அவர் கூறினார்.

‘அட்சய திருதியை’யொட்டி, தியாகராயநகர், பெரம்பூர், புரசைவாக்கம் உள்பட நகரின் முக்கிய பஜார் வீதிகளில் போலீசாரின் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top