தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு ஜெயலலிதா விளக்கம்

ayalalithaa-charges-Description_SECVPF
தமிழகத்தில் 310 ஏரிகள், 63 அணைகள் புனரமைக்கப்பட்டுள்ளன என்றும், ரூ.108 கோடியில் மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணி நடந்து வருவதாகவும் தி.மு.க. குற்றச்சாட்டுகளுக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சருமான ஜெயலலிதா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
 
கடந்த 5 ஆண்டுகளில் சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் நான் செய்த அறிவிப்புகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டி கருணாநிதியும், தி.மு.க.வினரும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
14 துறைகளில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து நான் ஏற்கனவே எனது அறிக்கைகளில் தெரிவித்திருந்தேன். தற்போது, மேலும் 3 துறைகளில் நான் செய்த அறிவிப்புகள் எவ்வாறு நிறைவேற்றப்பட்டிருக்கின்றன என்பது பற்றிய விவரங்களை நான் அளிக்க விரும்புகிறேன்.
 
பொதுப்பணித்துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:-
காஞ்சீபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்வள அமைப்புகளை வலுப்படுத்தி, நீர் வழங்கு கால்வாய்களை புனரமைக்கும் பணியின் கீழ் அடையாறு மற்றும் செய்யாறு-கிளியாறில் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. காவேரி டெல்டா மாவட்டங்களில் கிடைக்கக் கூடிய வெள்ள நீரை தேக்கி, தேவைப்படும் காலங்களில் பாசனத்திற்காக பயன்படுத்தும் வகையில் வெண்ணாறு அமைப்பில் உள்ள 6 ஆறுகள், வடிகால்களில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு நடைபெற்று வருகின்றது.
17 மாவட்டங்களில் உள்ள 310 ஏரிகள், 63 அணைக்கட்டுகள் மற்றும் அதன் நீர் வழங்கு வாய்க்கால்கள் புனரமைக்கப்பட்டுள்ளன. பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமம் அருகில் மருதையாற்றின் குறுக்கே 108 கோடி ரூபாய் மதிப்பீட்டில், மருதையாறு நீர்த்தேக்கம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே, கீழணையின் கீழ்புறம், தலை மதகுகளுடன் ஒரு கதவணை 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், கண்டலேறு-பூண்டி கால்வாய்களுக்கிடையே சரிந்த பல்வேறு பகுதிகளை பலப்படுத்தும் பணிகள் 19 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் முடிக்கப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி வட்டம், ஆழியாறு ஊட்டுக் கால்வாயை புனரமைக்கும் பணிகள் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன. மதுரை மாவட்டத்தில் பெரியார் பிரதான கால்வாயின் 5-வது, 6-வது, 8-வது, 9-வது மற்றும் 11-வது கிளைக் கால்வாய்கள் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னை மாவட்டம், தண்டையார்பேட்டை வட்டம், ராதாகிருஷ்ணன் நகரில் பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் விதமாக 5 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இருவழி பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
 
மாற்றுத்திறனாளிகள் நலத்துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:-
பார்வையற்ற மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியரின் கல்வி அறிவை மேம்படுத்தும் வகையில் தற்போது பார்வையற்ற மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் வாசிப்பாளர் உதவித்தொகை இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளி மாணவ – மாணவியர் கல்வி கற்பதை மேலும் ஊக்குவிக்கும் வகையில், அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை, இரு மடங்காக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 6 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளி குழந்தைகளை அவர்களது இல்லத்திற்கே சென்று சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் 32 மாவட்டங்களில் நடமாடும் சிகிச்சை பிரிவுகள் தொடங்கப்பட்டுள்ளன.
இரு கால்களும் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் மாற்றுத்திறனாளிகளுக்கிடையே அதிக வரவேற்பு பெற்றுள்ளதால், அதன் எண்ணிக்கை 400-ல் இருந்து 1,000 ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளன.
 
சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையில் நிறைவேற்றப்பட்ட பணிகள் வருமாறு:-
மானசரோவர் புனித யாத்திரை மேற்கொண்ட 595 நபர்களுக்கு தலா 40 ஆயிரம் ரூபாய் வீதம் 2 கோடியே 38 லட்சம் ரூபாய், முக்திநாத் புனிதயாத்திரை மேற்கொண்ட 184 நபர்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் வீதம் 18 லட்சத்து 40 ஆயிரம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே 518 திருக்கோவில்களில் சீரோடும் சிறப்போடும் நடத்தப்பட்டு வந்த அன்னதானத் திட்டம் விரிவுபடுத்தப்பட்டு, 15-9-2015 முதல் மொத்தம் 724 திருக்கோவில்களில் நடைபெற்று வருகிறது. 2,439 திருக்கோவில்களில் திருப்பணி முடித்து குடமுழுக்கு நடைபெற்றுள்ளது.
 
நிதியுதவி உயர்வு
ஆதிதிராவிட மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவில்களின் திருப்பணிக்காக வழங்கப்பட்டு வந்த நிதியுதவி கோவில் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாயில் இருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 3,630 திருக்கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் அமைந்துள்ள, இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சிறு திருக்கோவில்களுக்கு திருப்பணி செய்வதற்கான நிதியுதவி 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது. 3,316 திருக்கோவில்களுக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
 
மாதாந்திர ஓய்வூதியம்
இந்து சமய அறநிலையத்துறையின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டு வரப்படாத திருக்கோவில்களில் 20 ஆண்டுகள் பணிபுரிந்து 60 வயதினை நிறைவு செய்து ஓய்வு பெற்ற 2995 நபர்களுக்கு மாதாந்திர ஓய்வூதியம் 1-1-2014 முதல் 750 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. திருக்கோவில்களில் 10 ஆண்டுகளுக்கு குறைவாக பணியாற்றிய ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் அளிக்க, துறை நிலையிலான ஓய்வூதிய திட்டத்தின்கீழ் வழங்கப்பட்டு வந்த மாத ஓய்வூதியம் 800 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 3970 நபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 490 திருக்கோவில்கள், ஒரு மகளிர் கல்லூரி, ஒரு மேல்நிலைப்பள்ளி, இரண்டு உயர்நிலைப்பள்ளிகள் ஆகியவற்றை செம்மையாக நிர்வகிக்க ஏதுவாக அரசு மானியம் 1 கோடி ரூபாயில் இருந்து 3 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை, கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரிகள் மற்றும் மாமல்லபுரம் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக் கலைக் கல்லூரி மாணவர்கள் 574 பேருக்கு ஒரு கோடி ரூபாய் செலவிலும், திருவையாறு தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி மாணவர்கள் 28 பேருக்கு 4.43 லட்சம் ரூபாய் செலவிலும் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top