தமிழகத்தில் நேர்மையான அதிகாரிகள் பழிவாங்கப் படுகிறார்கள்: முத்தரசன்

honest-officials-Tamil-Nadu-bought-mutharasan-Interview_SECVPF

இந்திய கம்யூனிஸ்டு கட்சி யின் மாநில செயலாளர் முத்தரசன் மதுரையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் ஆளும் கட்சி கடைசி நேரத்தில் நிர்ப்பந்தத்தின் காரணமாக தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

கடந்த 2011–ல் வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் எது நிறைவேற்றப்பட்டு உள்ளது என்பதை அ.தி.மு.க. தெரிவிக்க வேண்டும். கடந்த முறை வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில் அரசு பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரப்படும் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் இதுவரை அது நிறைவேற்றப்படவில்லை. தற்போதைய அறிக்கையிலும் இதே வாக்குறுதி உள்ளது.

பூரண மதுவிலக்கு கேட்டு சசிபெருமாள் உள்பட பலர் போராட்டம் நடத்தினர். அப்போது இதை அமுல்படுத்துவது சாத்தியம் இல்லை என்று சட்டமன்றத்தில் அமைச்சர் நத்தம் விசுவநாதன் கூறினார். இதனை முதல்வர் மறுக்கவில்லை. ஆனால் இப்போது படிப்படியாக மதுவிலக்கை அமுல்படுத்து வோம் என்கிறார்.

சென்னை மதுரவாயலில் மதுக்கடைக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி உள்ளனர்.

கிரானைட் கொள்ளை கடந்த 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. இதில் ரூ.ஆயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சகாயம் தெரிவித்திருந்தார். அப்போது முதல்வர் மறுப்பு தெரிவிக்கவில்லை. இப்போது கிரானைட் கொள்ளையை தடுப்போம் என்கிறார். தாது மணல் கொள்ளை, மணல் கொள்ளை போன்றவை தொடர்ந்து நடைபெற்றே வருகிறது.

விவசாய கடன் ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு கடன் வசூலிக்கும்போது துன்புறுத்தப்பட்ட விவசாயிகள் அவமானம் தாங்காமல் தற்கொலை செய்தார்கள். இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது சொந்த பிரச்சினை காரணமாக அவர்கள் தற்கொலை செய்து கொண்டனர் என்று தமிழக அரசு கூறியது.

மின்மிகை மாநிலம், மின்வெட்டு இல்லை என முதல்–அமைச்சர் கூறுகிறார். ஆனால் மின் வெட்டு இருந்தே வருகிறது. தேவைக்கு ஏற்ப மின்உற்பத்தியை தமிழக அரசு அதிகரிக்கவில்லை. தமிழகம் அதிக கடன் சுமை உள்ள நிலையில் இந்த நேரத்தில் 100 யூனிட் மின்சாரத்துக்கு கட்டணம் இலவசம் என்பது சாத்தியம் இல்லாதது. ஆட்சியில் இருக்கும்போது செய்யாதவர்கள், இனி எப்படி செய்வார்கள். எனவே இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள்.

இதேபோல் தி.மு.க.வும் சில வாக்குறுதிகளை கொடுத்துள்ளது. ஆனால் அ.தி.மு.க., தி.மு.க. இரண்டுமே ஊழல் கட்சிகள்தான். தமிழகத்தில் அதிகம் ஊழல் நடந்துள்ளது. நேர்மையான அதிகாரிகள் நியாயமாக பணியாற்ற முடியவில்லை. அப்படி பணியாற்றினால் பழிவாங்கப்படுகிறார்கள். எல்லாத்துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது.

இந்த தேர்தலில் மக்கள் நலக்கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அதிகரித்துள்ளது. புதிய வாக்காளர்கள், மாணவர்கள், பெண்கள் என பலதரப்பினரும் எங்களுக்கு ஆதரவு தருகின்றனர். எனவே மக்கள் நலக் கூட்டணி அமோக வெற்றி பெறும். கருத்து கணிப்புகள் எடுபடாது.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top