இணையதளத்தில் இருந்து பயணிகளின் தகவல்கள் திருடப்படவில்லை ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம்

IRTCCரெயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் இணையதளத்தில் இருந்து பயணிகளின் விவரங்கள் திருடப்படவில்லை என்று ஐ.ஆர்.சி.டி.சி. விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ரெயில்களில் பயணம் செய்வதற்கு, ஐ.ஆர்.சி.டி.சி. எனப்படும் இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகத்தின் மூலம் தான் ஆன்லைன் டிக்கெட் பதிவு செய்ய முடியும். இந்த இணையதளம் மூலம் தினமும் லட்சக்கணக்கான மக்கள் ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர்.

இந்த டிக்கெட் பதிவு செய்யும் போது பயணிகள் தங்களது முழு விவரங்களையும், இ-மெயில்-செல்போன் எண்களையும், முகவரி சான்றாக ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, பான்கார்டு போன்றவற்றின் எண்களையும் தருகின்றனர்.

இது தவிர டிக்கெட் கட்டணம் செலுத்துவதற்கு வங்கி கணக்கு விவரங்கள், டெபிட்- கிரெடிட் கார்டு ஆகியவற்றின் எண்களையும் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம், ஹேக்கர்களால் முடக்கப்பட்டதாகவும், அதில் இருந்த பயணிகளின் தகவல்கள் முழுவதும் திருடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது குறித்து பல்வேறு இணையதளங்கள், பத்திரிகைகளில் செய்தியும் வெளியானது. ஆனால் இந்த செய்தியை ஐ.ஆர்.சி.டி.சி. முற்றிலும் மறுத்து உள்ளது.

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி. நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ரெயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் ஐ.ஆர். சி.டி.சி. இணையதளம், இந்திய ரெயில்வே தகவல் மையம் மூலம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் இருந்து தகவல் திருடப்பட்டதாக செய்தி வந்தவுடன், உடனடி விசாரணை நடத்தப்பட்டது. ஆனால் விசாரணையில், இணையதளத்தின் தகவல்கள் திருடப்படவில்லை என்று தெரியவந்தது.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மூலம் கடந்த ஏப்ரல் மாதத்தில் ஒரு நாளில் அதிகபட்சமாக 2 லட்சத்து 66 ஆயிரம் பேர் மூலம் 5 லட்சத்து 48 ஆயிரம் டிக்கெட்டுகள் பதிவு செய்யப்பட்டது.

ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை கொண்டது. மத்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்கிறது. மேலும் இந்த இணையதளம் எப்போதும் தொடர்ச்சியாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அந்த இணையதளத்தின் பாதுகாப்பு அம்சங்களில் அத்துமீறி நுழைய முயன்றால் அலார்ட் செய்யும் வசதியும் உள்ளது. அதே போல் இந்த இணையதளத்தின் சர்வர்கள் பராமரிக்கப்படும் ரெயில்வே பாதுகாப்பு மையத்தில் சி.சி.டி.வி. காமிரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

பொதுவாக இ-காமர்ஸ் நிறுவனங்கள், மார்கெட்டிங் நிறுவனங்கள் போன்றவை தங்களுடைய வாடிக்கையாளர்களின் செல்போன் எண்கள் மற்றும் இ-மெயில் முகவரிகளை கார் வாடகை நிறுவனங்கள், ஓட்டல்கள் போன்றவற்றுடன் பகிர்ந்து கொள்கின்றனர்

ஆனால் இதுவரை ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொடங்கப்பட்டதில் இருந்து தனது பயணிகளின் தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொண்டது கிடையாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top