பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்ற சோனியா, ராகுல்காந்தி கைது “எங்களை அச்சுறுத்த நினைக்கவேண்டாம்” என மோடிக்கு எச்சரிக்கை

201605070426356404_ParliamentTowardsProcessionSonia-Rahul_SECVPF

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் காங்கிரஸ் தலைவர்கள் மீதான குற்றச்சாட்டை கண்டித்து ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் சோனியா, ராகுல்காந்தி, மன்மோகன் சிங் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஹெலிகாப்டர் பேர ஊழலில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, அவருடைய அரசியல் ஆலோசகர் அகமது பட்டேல் உள்ளிட்ட தலைவர்களுக்கு தொடர்பு இருப்பதாக பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியசாமி குற்றம் சாட்டி இருந்தார். இதற்கு காங்கிரசார் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சோனியாவும், தனக்கு இதில் சம்பந்தமில்லை என்று மறுத்தார். எனினும் ஹெலிகாப்டர் பேர ஊழலை பாராளுமன்றத்திலும், வெளியேயும் தொடர்ந்து பா.ஜனதாவும் எழுப்பி வருகிறது.

இதைக் கண்டித்தும், ஜனநாயகத்தை காப்போம் என்ற முழக்கத்துடன் பாராளுமன்றம் நோக்கி மே 6-ந்தேதி காங்கிரசார் ஊர்வலமாக செல்வார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி நேற்று காலை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தி உள்பட ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் பாராளுமன்றம் நோக்கி ஊர்வலமாக சென்றனர். அப்போது மோடி அரசுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை படுகொலை செய்யாதே எனவும், அவர்கள் கோஷங்களை எழுப்பினர். ஊர்வலத்தையொட்டி ஏராளமான போலீசார் அங்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.

காங்கிரசார் பாராளுமன்ற தெரு போலீஸ் நிலையம் வழியாக செல்ல முயன்றபோது அவர்கள் அனைவரையும் போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

ஊர்வலம் தொடங்குவதற்கு முன்பாக சோனியாகாந்தி பேசும்போது கூறியதாவது:-

அனுமதிக்க மாட்டோம்

மோடி அரசு எதிர்க்கட்சிகள் மீது அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறும் விளையாட்டை நடத்த தொடங்கி உள்ளது. இதை எதிர்த்து வரும் நாட்களில் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் இன்னும் வேகமாக செயல்படுவோம்.

காங்கிரஸ் பலவீனமாக இருக்கிறது என்று நினைத்து நீங்கள் தவறு செய்யாதீர்கள். ஜனநாயக அமைப்புகள் பலவீனம் ஆக்கப்படுவதையோ, அல்லது அதை அழிப்பதையோ நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்.

போராடும் சக்தி

அதேபோல் எங்களை அச்சுறுத்தவோ, களங்கப்படுத்தவோ முயற்சிக்கவும் வேண்டாம். வாழ்க்கை எனக்கு போராடும் சக்தியை கொடுத்து இருக்கிறது. இன்று அவர்களை ஏற்றுக் கொள்ளாதவர்கள் தொந்தரவு செய்யப்படுகின்றனர். இதே போக்கு நீடித்தால் மக்கள் உங்களுக்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள். மத்திய அரசுக்கும்(மோடி), நாக்பூரில் இருப்பவர்களுக்கும் (ஆர்.எஸ்.எஸ்.) எச்சரிக்கையாக ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

நீங்கள் ஜனநாயகத்தை அழிக்க முயற்சி செய்தால் அதை அனுமதிக்க மாட்டோம். கடந்த காலங்களில் நாங்கள் சந்தித்த பல கடுமையான சவால்களைப் போலவே இதையும் எதிர்த்து போராடுவோம். காங்கிரசுக்கு போராட்டங்கள் புதிது அல்ல. இந்த நாட்டுக்காக நாங்கள் ரத்தம் சிந்தியவர்கள். உயிர்த்தியாகம் செய்தவர்கள். எனவே எங்களுடைய போராட்ட குணத்தில் இருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டோம்.

ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை மோடி அரசு பணபலத்தால் வீழ்த்துகிறது. அருணாசலபிரதேசத்திலும், உத்தரகாண்டிலும் ஜனநாயக படுகொலை நடத்தப்பட்டது. இன்று உத்தரகாண்டில் எந்த அரசும் இல்லை. அதனால்தான் அந்த மாநிலத்தின் காடுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க முடியவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

ராகுல் தாக்கு

ராகுல்காந்தி பேசும்போது, “மோடி அரசு ஜனநாயக படுகொலைகளில் ஈடுபட்டு வருகிறது. இதை எதிர்த்து யார் குரல் கொடுத்தாலும் அவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்துகின்றனர். இனி நல்ல நாட்கள் வரும் என்று பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தின்போது கூறினார்கள். ஆனால், இந்த அரசு, தான் அளித்த எல்லா வாக்குறுதிகளிலும் தோல்வி கண்டுவிட்டது’’ என்று கடுமையாக தாக்கினார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பேசுகையில், ‘‘அருணாசலபிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியது ஜனநாயகத்தை அழிக்கும் செயல்’’ என்று குறிப்பிட்டார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top