அரசை எதிர்த்து போராட்டம் – பாராளுமன்றத்தை முற்றுகையிடச் சென்ற சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைது

201605061219142861_Sonia-Rahul-Gandhi-and-former-PM-Manmohan-Singh-court-arrest_SECVPFஜனநாயகத்தை கேலிகூத்தாக்கும் வகையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிகளை கலைக்கும் மத்திய அரசை கண்டித்து வரும் மே மாதம் ஆறாம் தேதி பாராளுமன்ற முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்திருந்தது.

அருணாச்சலப் பிரதேசம் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரசுகளை கவிழ்த்தது மற்றும் எதிர்க்கட்சியினரை குறிவைத்து பொய் மற்றும் அவதூறு பிரசாரங்களை பரப்புவது, நாடெங்கும் பெருகிவரும் விவசாயிகள் தற்கொலை உள்ளிட்ட பல பிரச்சனைகளை மையப்படுத்தி, மத்திய அரசின் செயல்பாடுகளில் இருந்து ‘ஜனநாயகத்தை காப்பாற்றுங்கள்’ என்ற முழக்கத்துடன் இந்த போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரிகள், எம்.பி.க்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் பாராளுமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்றனர்.

முன்னதாக, ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொண்டர்களிடையே பேசிய சோனியா காந்தி, ஜனநாயகத்தின் வேர்களை அழிக்க மோடி தலைமையிலான மத்திய அரசு முயன்றுவருவதாக குற்றம்சாட்டினார். அநீதிகளுக்கு காங்கிரஸ் ஒருபோதும் அடிபணியாது, சரியான வகையில் அதை எதிர்கொள்ளும் என குறிப்பிட்ட அவர், மோடி அரசின் முகமூடியை ஜனநாயக முறையில் நாம் கிழித்தெறிய வேண்டும் என தொண்டர்களை கேட்டுக் கொண்டார்.

அடிப்படை ஆதாரங்களற்ற குற்றச்சாட்டுகளால் எதிர்க்கட்சியினரை குறிவைத்து அரசு தாக்குதல் நடத்திவருவதாகவும் குறிப்பிட்ட சோனியா காந்தி, நாம் பல சவால்களை கடந்து வந்துள்ளோம். தொடர்ந்து போராடும் ஆற்றலை வாழ்க்கை எனக்கு கற்றுத் தந்துள்ளது என்று கூறினார்.

பின்னர், சோனியா காந்தி தலைமையில் அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டு பாராளுமன்ற கட்டிடத்தை நோக்கிச் சென்றனர். அவர்கள் பாராளுமன்றத்தை நெருங்காத வகையில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். அந்த வேலிகளை கடந்து முன்னேறிச் செல்ல முன்னாள் மத்திய மந்திரி ரேணுகா சவுத்ரி உள்ளிட்ட காங்கிரசார் முயன்றனர்.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி உள்ளிட்டோரை பாராளுமன்ற தெரு காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் கைது செய்தனர். சிறிது நேரத்துக்கு பின்னர் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top