மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல்

dcvv

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து பல்வேறு மாநிலங்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளன.
கர்நாடகா, ஆந்திரா, தெலங்கானா, மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழக்கு தொடர்ந்துள்ளன. ஏற்கெனவே தமிழக அரசும் மருத்துவ பொது நுழைவுத் தேர்வை எதிர்த்து வழக்கு தொடர்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல்வேறு மாநிலங்கள் தொடர்ந்த மனு, நாளை (செவ்வாய்க் கிழமை) பகல் 2 மணிக்கு விசாரணைக்கு வருகிறது.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கு இரண்டுகட்டங்களாக பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மத்திய அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
அதன்படி நேற்று மே 1-ம் தேதி முதல் கட்ட தேர்வு நடந்தது. இரண்டாம் கட்ட தேர்வு ஜூலை 24-ம் தேதி நடைபெறுகிறது.

இந்நிலையில், மருத்துவ பொது நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி பல்வேறு மாநிலங்களும் மனு தாக்கல் செய்துள்ளன.

அந்த மனுக்களில், அந்தந்த மாநில அரசுகளே தங்கள் பாடத்திட்டத்துக்கு ஏற்ப தனித் தனியாக நுழைவுத் தேர்வை நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.
சில தனியார் கல்லூரிகளும் இதே கோரிக்கையை முன்வைத்து மனு தாக்கல் செய்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மருத்துவ பொது நுழைவுத் தேர்வு விவகாரத்தில் 2018 வரை மாநில அரசுகளுக்கு அவகாசம் அளிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் சிலர் வலியுறுத்தியது கவனிக்கத்தக்கது.
இதனிடையே, எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கான முதல் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET) நேற்று நடந்தது. நாடு முழுவதும் 52 நகரங்களில் 1,040 மையங்களில் நடைபெற்ற தேர்வை சுமார் 6.60 லட்சம் மாணவர்கள் எழுதினர்.

தமிழகத்தில் சென்னையில் மட்டும் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. சென்னையில் 39 மையங்களில் நடந்த தேர்வை எழுத சுமார் 26 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். 2-ம் கட்ட தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு வரும் ஜூலை 24ம் தேதி நடக்கிறது. தேர்வு முடிவுகள் வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வெளியிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top