அ.தி.மு.க.வில் இணைவதாக சொல்வது பச்சை பொய்; என் கடைசி மூச்சுவரை கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன்;தா.பாண்டியன்

என் கடைசி மூச்சுவரை கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன். அ.தி.மு.க.வில் இணைவதாக வந்த செய்தி கடைந்தெடுத்த பச்சை பொய் என்று தா.பாண்டியன் கூறினார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக் குழு உறுப்பினரும், முன்னாள் மாநில செயலாளருமான தா.பாண்டியன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

த

அ.தி.மு.க.வில் நான் இணைய போவதாக ஒரு நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நாடு விடுதலை பெற்ற பின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டிருந்த வேளையில், எங்கள் ஊரில் நானும் மாணவர்கள், இளைஞர்கள் என மொத்தம் 8 பேர் கட்சிக்கு ஆதரவாக சுவரில் எழுதி, துண்டுப் பிரசுரம் தயாரித்தோம்.

காவல்துறை எங்களை கைது செய்து, மாஜிஸ்திரேட்டு முன்னாள் நிறுத்தியது. அப்போது எனக்கு 14 வயது. அன்று தொடங்கி இன்று வரை நான் கம்யூனிஸ்டாகத்தான் வாழ்ந்து வருகிறேன். என் கடைசி மூச்சுள்ள வரை நான் கம்யூனிஸ்டு கட்சியில் தான் இருப்பேன். மரணமடையும் போதும் நான் மார்க்சியவாதியாக தான் மரணமடைவேன்.

நான் அ.தி.மு.க.வில் இணையவிருப்பதாக வந்துள்ள செய்தி துரும்பளவு கூட அடிப்படை ஆதாரமற்ற கடைந்தெடுத்த பச்சை பொய். அரசியல் பற்றி, விவாதங்கள், விமர்சனங்கள் வரலாம். ஆனால், 50 ஆண்டுகளுக்கும் மேலான எனது பொது வாழ்க்கையை சிதறடிக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

எனது மகனை துணைவேந்தராக்க நான் முயற்சிப்பதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது. எனது மகன் திருச்சியில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். எனது மனைவியின் உடல்நிலை பாதிக்கப்பட்டபோது, அருகிலிருந்து கவனித்துக் கொள்வதற்காக அவரை சென்னைக்கு வர சொன்னேன்.

சென்னையில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் வேலைக்குதான் அவர் மனு செய்தார். ஆனால் அவருக்கு பல்கலைக்கழக பதிவாளர் வேலை தரப்பட்டது. அவருக்கு துணைவேந்தர் பதவியை நான் யாரிடமும் கேட்கவில்லை. துணைவேந்தர் பதவி வேண்டுவோர், அதற்காக விருப்பம் தெரிவித்து மனு அளிக்க வேண்டும். ஆனால், அவர் இதுவரை மனு செய்யவும் இல்லை.

என்னுடைய மகன் செய்தி வெளியிட்ட நாளிதழ் மீது வழக்கு தொடர்ந்தாலும் தொடர்வார். நானும் கட்சி தலைமையோடு பேசி அனுமதி பெற்று வழக்கு தொடருவேன்.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தனிநபர் சர்வாதிகாரமே கோலோச்சும். கருணாநிதி 90 வயதை தாண்டிய பின்னரும், 6-வது முறையாக முதல்- அமைச்சராக தன்னை தேர்வு செய்யக்கோரி பிரசாரம் செய்கிறார். அவர் வாக்கு கேட்பது தனக்காக அல்ல. தனது மகன் ஸ்டாலினுக்கும், பேரன் உதயநிதிக்குமாக வாக்கு கேட்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top