தமிழகம் வளம் காண கூட்டணிக் கட்சி ஆட்சி அவசியம்: ஆர். நல்லகண்ணு

ஆர். நல்லகண்ணுதமிழகம் வளம் காண கூட்டணிக் கட்சி ஆட்சி அவசியம் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு கூறினார்.

 தேமுதிக – மக்கள் நலக் கூட்டணி – தமாகா கூட்டணியில் ஸ்ரீவைகுண்டம் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் தமாகா வேட்பாளர் எஸ்.டி.ஆர். விஜயசீலனை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம், சாயர்புரம், ஆறுமுகமங்கலம், ஏரல், ஆழ்வார்திருநகரி, ஸ்ரீவைகுண்டம் பகுதிகளில் அவர் வியாழக்கிழமை வாக்கு சேகரித்தார்.

 ஆழ்வார்திருநகரியில் அவர் பேசியதாவது:

 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சிக்குப் பிறகு அண்ணா சில காலம் மட்டுமே ஆட்சி செய்தார். பின்னர், திமுகவும், அதிமுகவும் மாறிமாறி ஆண்டு வருகின்றன. ஆனால், தமிழகத்தில் இதுவரை எந்த முன்னேற்றமுமில்லை.

மக்களைப் பற்றி ஒருபோதும் சிந்திக்காத திமுக, அதிமுகவை ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கவும், மக்கள் வாழ்வில் விடிவுகாலம் பிறப்பதற்காகவும்தான் புதிதாக மக்கள் நலக் கூட்டணி உருவாகியுள்ளது.

 தமிழகம் வளம் காண வேண்டுமெனில் ஒரு கட்சி ஆட்சியில் அது சாத்தியமில்லை, கூட்டணிக் கட்சி ஆட்சியில்தான் சாத்தியம். எனவே, மக்கள் நலக் கூட்டணிக்கு ஆதரவு தந்து கூட்டணி ஆட்சி அமைய வழிசெய்ய வேண்டும். திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டுகால ஊழல் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.

 வற்றாத ஜீவ நதியான தாமிரவருணியில் அரசின் துணையுடன் நடக்கும் மணல் கொள்ளையைத் தடுக்க வேண்டும் என, விவசாயிகள், மக்களுடன் இணைந்து தொடர்ந்து போராடி வருகிறோம். இதில் திமுக, அதிமுக அக்கறை காட்டவேயில்லை.

 நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் தாமிரவருணியில் மணல் கொள்ளை முற்றிலும் தடுக்கப்படும் என்றார் அவர்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top