ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவுக்கு தொடர்பு: சுப்பிரமணிய சாமி பேச்சால் பாராளுமன்றத்தில் கடும் அமளி

201604271307487566_Swamy-links-Sonia-with-chopper-deal-Cong-forces_SECVPFஅகஸ்டா வெஸ்லேன்ட் ஹெலிகாப்டர் ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக பாராளுமன்ற மேல்சபையில் பா.ஜ.க. தலைவர் சுப்பிரமணிய சாமி எழுப்பிய குற்றச்சாட்டால் கடும் அமளி ஏற்பட்டது.

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில், மிகமிக முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக 12 ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கு ஒரு இத்தாலி நிறுவனத்துக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பெருமளவு லஞ்சப்பணம் கைமாறியதாக தெரிய வந்ததால், ஒப்பந்தம் அப்போதே ரத்து செய்யப்பட்டது.

இருப்பினும், லஞ்சம் கொடுத்த இத்தாலியைச் சேர்ந்தவர்களுக்கு எதிராக இத்தாலி கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வந்தது. அதில், அவர்கள் குற்றவாளிகள் என்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பயன்படுத்த பா.ஜனதா திட்டமிட்டுள்ளது. பா.ஜனதா தலைவர் அமித் ஷா, மத்திய மந்திரிகள் அருண் ஜெட்லி, வெங்கையா நாயுடு உள்ளிட்ட பா.ஜனதா மூத்த தலைவர்கள் இதுதொடர்பாக வியூகம் வகுத்துள்ளனர்.

இந்நிலையில், பா.ஜனதாவைச் சேர்ந்த மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஹெலிகாப்டர் ஊழலில் லஞ்சம் கொடுத்தவர்கள் ‘குற்றவாளிகள்’ என்று இத்தாலி கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இந்த விவகாரத்தில் ஊழல் நடந்துள்ளது என்பதை நம்ப இடமுள்ளது என்றும், ரூ.65 கோடி முதல் ரூ.95 கோடி வரை இந்திய நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பது நிரூபணம் ஆகியிருப்பதாகவும் இத்தாலி கோர்ட்டு கூறியுள்ளது.

ஹெலிகாப்டர் பேரத்தில் ஊழல் நடந்துள்ளதாக 2013-ம் ஆண்டு மார்ச் மாதம், அப்போதைய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கூறினார். லஞ்சம் கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட்டு விட்டனர். லஞ்சம் பெற்றவர்கள் மவுனமாக வேடிக்கை பார்க்கக்கூடாது. லஞ்சம் பெற்றவர்களின் பெயர்களை அந்தோணி வெளியிட வேண்டும்.

இந்த பட்டியலில் காங்கிரஸ் தலைவர்கள் இருக்கிறார்களா? இல்லையா? என்பதையும் அவர் சொல்ல வேண்டும்.

பாராளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியை தாக்குவதற்கு இந்த விவகாரத்தை பா.ஜனதா பயன்படுத்தும். இது தனிப்பட்ட ஒரே ஒரு ஊழல் அல்ல. மன்மோகன்சிங்கின் 10 ஆண்டுகால ஆட்சி முழுவதுமே ஊழலுக்கு பெயர் பெற்றதுதான்.

இது காங்கிரசுக்கு எதிரான முதல் அத்தியாயம் மட்டுமே. இன்னும் தொடரும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத் கூறியிருந்தார்.

இந்நிலையில், இன்று காலையில் பாராளுமன்றம் கூடியதும் மேல்சபையில் இந்தப் பிரச்சனை வெடித்தது.

இவ்விவகாரம் தொடர்பாக பேசிய பா.ஜ.க., மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சுப்பிரமணிய சாமி, இந்த ஊழலில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கும் தொடர்பு இருப்பதாக நேரடியாக குற்றம்சாட்டினார்.

இதற்கு ஆதாரமாக, இந்திய அரசுக்கு ஹெலிகாப்டர்களை வாங்கித்தரும் இடைத்தரகராக செயல்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல் என்பவர் இத்தாலி ஐகோர்ட்டில் சமர்ப்பித்த வாக்குமூலத்தையும் அவர் சுட்டிக் காட்டினார்.

சுப்பிரமணிய சாமியின் இந்த பேச்சுக்கு காங்கிரஸ் எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து கூச்சலிட்டனர். அவையின் மையப்பகுதியை நோக்கி சென்ற அவர்கள் அமளியில் ஈடுபட்டனர். ஆளும்கட்சி எம்.பி.க்களும் பதிலுக்கு கூச்சலிட்டதால் பாராளுமன்ற பாதுகாவலர்கள் இருதரப்பினருக்கும் இடையே அரண்போல் நின்று நிலைமையை சமாளித்தனர்.

தொடர்ந்து கூச்சல் நிலவியதால் அவையை பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் பி.ஜே. குரியன் அறிவித்தார். பத்து நிமிடங்களுக்கு பின்னரும் இதேநிலை நீடித்ததால் 12 மணிவரை அவையை ஒத்திவைப்பதாக துணை சபாநாயகர் அறிவித்தார்.

இதற்கிடையே, அவையில் இல்லாத சோனியா காந்தியின் பெயரை சுப்பிரமணிய சாமி குறிப்பிட்டதால், அவரது பேச்சில் இருந்து சோனியாவின் பெயரை மட்டும் நீக்கம் செய்வதாக துணை சபாநாயகர் தெரிவித்தார்.

நேற்று மேல்சபை உறுப்பினராக பொறுப்பேற்று கொண்ட நீங்கள் பேசும் முதல்பேச்சு இது என்பதால் உங்களது பேச்சை முழுமையாக நீக்க நான் விரும்பவில்லை என சுப்பிரமணிய சாமியிடம் தெரிவித்த துணை சபாநாயகர் பி.ஜே. குரியன், எனினும், ஏற்கனவே எம்.பி.யாக இருந்த அனுபவம்மிக்க நீங்கள் வேறொரு அவையின் உறுப்பினராக உள்ள ஒருவரைப் பற்றி (சோனியா) இங்கு பேசக்கூடாது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் சுட்டிக் காட்டினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top