அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரயில் போக்குவரத்து துவக்கம்!

chennai metro trainசென்னை கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான முதல்கட்ட மெட்ரோ ரயில் போக்குவரத்து வருகிற அக்டோபர் மாதம் இறுதியில் துவங்க இருப்பதாக மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் மெட்ரோ ரெயில் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. சுரங்கப் பாதையிலும் உயர்மட்ட பாதையிலும் மெட்ரோ ரெயில்கள் செல்லும் வகையில் பாதை அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடந்து வருகிறது.

முதல் கட்டமாக கோயம்பேடு – பரங்கிமலை இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால் பரங்கிமலை மெட்ரோ ரெயில் நிலையம், பறக்கும் ரெயில், புறநகர் மின்சார ரெயில், எக்ஸ்பிரஸ் ரெயில் ஆகியவற்றுக்கு மாறிச் செல்லும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருவதால் இந்த பணி தாமதமாகி வருகிறது.

எனவே கோயம்பேடு– ஆலந்தூர் இடையே 10 கிலோ மீட்டர் தூரத்துக்கு முதலாவது மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேடு பணிமனையில் முதலாவது மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டத்தை முதல் அமைச்சர் ஜெயலலிதா கடந்த நவம்பர் மாதம் தொடங்கி வைத்தார்.

பின்னர் பிப்ரவரி மாதம் 14–ந்தேதி கோயம்பேடு – அசோக்நகர் இடையே 5.5 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அசோக்நகர் – ஆலந்தூர் இடையே கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்துக்கு மேலே பறக்கும் மெட்ரோ ரெயில் பாதை 175 மீட்டர் நீளத்துக்கு அமைக்கப்படுகிறது. அங்கு தண்டவாளம் பதிக்கும் பணிகளும், எலக்ட்ரிக்கல் வேலைகளும் நடந்து வருகின்றன.

தரையில் இருந்து 80 அடி உயரத்தில் அமைக்கப்படும் இந்த பணிகள் மே மாதம் 10–ந்தேதிக்குள் முழுவதுமாக முடிக்கப்பட்டு விடும். கோயம்பேடு – ஆலந்தூர் இடையே மெட்ரோ ரெயில் சோதனை ஓட்டம் மே 15–ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது என்று மெட்ரோ ரெயில் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,

கோயம்பேடு – ஆலந்தூர் இடையே தொடங்கும் சோதனை ஓட்டம் ஒரு மாதம் காலம் வரை நடை பெறும். ஜூன் மாத இறுதியில் உத்தரபிரதேச தலை நகர் லக்னோவில் உள்ள இந்தியன் ரெயில்வே ஆராய்ச்சி வடிவமைப்பு மற்றும் தர அமைப்பை சேர்ந்த 10–க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சென்னை வருகிறார்கள்.

அவர்கள் கொண்டு வரும் சாதனங்களை மெட்ரோ ரெயிலில் பொருத்தி கோயம்பேடு – ஆலந்தூர் இடையே அதிகபட்சம் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை மேற்கொள்வார்கள். தண்டவாளம் நேராக உள்ள பகுதிகளில் அதிக பட்சம் மணிக்கு 88 கிலோ மீட்டர் வேகத்திலும், வளைவிலான பகுதிகளில் மணிக்கு 50 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் மெட்ரோ ரெயிலை இயக்கி சோதனை நடத்தப்படும். இந்த சோதனை ஜூலை இறுதி வரை நடைபெறும்.

இதற்கிடையே கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உள்ள 7 மெட்ரோ ரெயில் நிலையங்கள் கட்டுமானப் பணிகள் முடிக்கப்படும்.

அக்டோபர் முதல் வாரம் ரெயில்வே பாதுகாப்பு ஆணையாளரை அழைத்து வந்து சோதனை ஓட்டம் நடத்தப்படும். அவர் அனுமதி கொடுத்ததும் அக்டோபர் மாதம் இறுதியில் கோயம்பேடு – ஆலந்தூர் இடையே உயர்மட்ட பாதையில் முதலாவது மெட்ரோ ரெயில் போக்குவரத்து தொடங்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top