லவ்விங் வின்சன்ட் : Loving Vincent முழுவதும் வரையப்பட்ட அனிமேஷன் படம்!

ew

வின்சென்ட் வான் கோ(ஹ்) என்கிற உலக புகழ் பெற்ற ஓவியரின் வாழ்க்கை வரலாற்றை  ஆயில் பெயிண்டிங்கால் வரைந்து படமாக்கப்பட்டு, இந்த வருடம் வெளியிடப்பட இருக்கும் படம் லவ்விங் வின்சன்ட். அதன் ட்ரைலர் தற்போது உலகெங்கும் பரவி பார்க்கப்பட்டுக்கொண்டுஇருக்கிறது.

சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான ஆஸ்கர் வாங்கிய பீட்டர் அண்ட் தி உல்ஃப் படத்தை தயாரித்து வெளியிட்ட பிரேக்த்ரூ ஃபிலிம்ஸ் என்ற லண்டனை தலைமை இடமாகக் கொண்ட தயாரிப்பு நிறுவனத்துடன் ட்ரேட்மார்க் ஃபிலிம்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரிக்கிறார்கள். மேலும் தி ஃபிளையிங் மெஷின் போன்ற சில படங்களை பிரேக்த்ரூ ஃபிலிம்ஸ் –க்காக இயக்கிய டோரோடா கோபியேலா மற்றும் ஹக் வேல்ச்மேன் இணைந்து எழுதி இயக்குகிறார்கள்.

தன்னுடைய இருவது வயதில் ஓவியம் வரையத் தொடங்கிய வான் கோ(ஹ்) முப்பத்து ஏழு வயதில் அவர் துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ளும் வரை, அவருடைய ஓவியங்கள் பெரிதாக பேசப்படவில்லை. அவருடைய மிகவும் புகழ் பெற்ற ஓவியங்கள் அனைத்தும் அவரது தற்கொலைக்கு முன்னதான இரண்டு வருடங்களில் வரையப்பட்டவை. வான் கோ(ஹ்) வின் வாழ்க்கை குறிப்புகள் பெரும்பாலும் வின்சன்ட் ற்கும் அவரது தம்பி தியோ விற்கும் இடையிலான கடிதப் போக்குவரத்தில் இருந்து பெறப்பட்டவையே.

vankooo

ஆயில் பெயிண்டிங் இல் மிகப் பெரிய மேதாவியாகக் கருதப்படும் வின்சன்ட், அன்று மிகவும் மந்தமான நிறங்களை பயன்படுத்துவதாகக் கூறி ஒதுக்கப்பட்டார். அவருடைய ஓவியங்கள் சரியாக விற்கப்படாமல் பல நாட்களை வறுமையில் கழித்திருக்கிறார். “நான் கடந்த மே இல் இருந்து ஆறு முறை உணவு சாப்பிட்டது தான் ஞாபகம் இருக்கிறது” என்று 1886 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவரது தம்பி தியோ விற்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கையில் பல்வேறு சிக்கல்களையும் குழப்பங்களையும் சந்தித்திருந்தார் வின்சன்ட்.

தொடர்ந்த ஏமாற்றங்களின் பின்பு, வின்சன்ட் ஒரு விலை மாதுவை மிகவும் விரும்பினார். அந்த பெண் வின்சன்ட் ஐ விட்டு விலக முடிவு செய்தது தெரிந்தவுடன், அந்தப் பெண் தனக்கு மிகவும் பிடித்ததாக கூறிய தனது காதினை அறுத்து கொடுத்து பரிசாக்கி  விட்டார். இதற்கு வின்சன்ட் மிகப்பெரிய விலையினை கொடுக்க வேண்டி இருந்தது. தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டார். அதற்கு முன்னரே மன அழுத்தத்தினால் தொடர்ந்து மருத்துவ உதவி பெற வேண்டிய நிலையில் இருந்த வின்சன்ட் மீண்டும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மிகவும் மத நம்பிக்கையுடன் வளர்ந்த வின்சன்ட் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த தொடர் தோல்விகளின் காரணமாக கடவுள் நம்பிக்கையை கை விட்டார். அவருடைய ஓவியங்களின் நிறக் கலவைகள் இன்று உலக ஓவிய வல்லுனர்களால் பெரிதாக போற்றப்படுவதாக உள்ளது.

அவரின் முதல் சிறந்த ஓவியமாக கருதப்படுவது The Potato Eaters என்ற ஓவியம். அவர் நெதர்லாந்தில் நியுயினேன் என்ற இடத்தில் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுடன் வாழ்ந்த பொழுது வரையபட்டது. அந்த சூழலை அவர் எவ்வளவு ஆழமாக உள்வாங்கி இருக்கிறார் என்பது அந்த ஓவியத்தை பார்க்கும் போது நமக்கு புலப்படும். மிகவும் மந்தமான நிறங்களை பயன்படுத்தி இருப்பார். மேலும், அந்த ஓவியத்தில் அவர்  பயன்படுத்திய மாதிரிகளும் தத்ரூபமாக தொழிலாளர் போன்றே இருப்பர். அவர்கள் கிழங்கு உண்பது போல் இருக்கும் இந்த ஓவியத்தை வின்சன்ட் 1885 இல் வரைந்தார்.

அவருடைய மற்றொரு சிறந்த ஓவியமாக கருதப்படுவது Starry Night என்ற ஓவியம். உணர்வுப்பூர்வமான வெளிப்பாட்டை வானத்தின் கொந்தளிப்பான சித்தரிப்பின் மூலம் விளக்கிய இவரது இந்த கற்பனை யோசித்து கூட பார்க்க முடியாதது.மேலும், அவருடைய காது இல்லாமல் அவர் வரைந்த ஓவியங்களையும் சேர்த்து அவரே வரைந்த அவருடைய உருவப்படங்களுடன் இன்னும் பல்வேறு ஓவியங்களை மிக அருமையாக தீட்டியவர் வின்சன்ட்.

vankoo 2

இந்த புரிந்து கொள்ள முடியாத ஓவிய மேதையைப் பற்றி படமாக்கிய லிவ்விங் வின்சன்ட் படத்தை 2011 ஆம் ஆண்டு தொடங்கினர். பின்னர், 2014 ஆம் ஆண்டு கிக்ஸ்டாட்டர் என்ற அமைப்பின் மூலம், பல்வேறு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு பொது மக்களிடம் இருந்து நிதி திரட்டப்பட்டது. வின்சன்டிற்கும் அவரது தம்பி தியோ விற்கும் இடையிலான கடிதங்கள் மட்டும் அல்லாமல், அவர் சந்தித்த மனிதர்களிடமும் பேட்டி கண்டு இந்தப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், வின்சன்டின் ஓவியங்களின் கதாப்பத்திரங்களும் அவரைப் பற்றி கூறுவதாக வரும் காட்சிகள் படத்தில் இடம் பெற இருக்கின்றன. படத்தின் பிரேம்கள் ஒவ்வொன்றும் கான்வாஸ் எண்ணெய் ஓவியம் ஆகும்  62 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியங்கள் வின்சன்ட் பயன்படுத்திய அதே ஆயில் ஓவிய முறையைப் பயன்படுத்தி 100 க்கும் மேற்பட்ட ஓவியர்களால் வரையப்பட்டுள்ளன. தேர்வுகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்த ஓவியர்களுக்கு இதற்கென தனி பயிற்சி அளிக்கப்பட்டது. பின்னர் அதனை மிக உயர் ரக கணினிகளைப் பயன்படுத்தி டிஜிட்டல் முறைக்கு மாற்றி உள்ளனர்.

தன்னுடைய காலத்தில் கொண்டாடப்படாமல், ஓவியர்களில் மிக முக்கிய மாமேதையாகக் கருதப்படும், மர்மமான மனிதர் வான் கோ(ஹ்) இன் வாழ்க்கை வரலாற்றைப் பற்றிய முழுவதும் வரையப்பட்ட இந்த அனிமேஷன் படம் இந்த ஆண்டு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை உலக அளவில் பெற்றுள்ளது.

லவ்விங் வின்சன்டின் ட்ரைலரைப் பார்க்க

குயிலி கால்வின்


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top