ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போனவர் கருணாநிதி; ஜெயலலிதா குற்றச்சாட்டு

ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணைபோனவர் கருணாநிதி என்று முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.

திருச்சியில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:-

இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை பற்றி ஒரு சில கருத்துகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே, இலங்கை தமிழர் பிரச்சினையில் பல கபட நாடகங்களை ஆடி இலங்கை தமிழருக்கு தி.மு.க. துரோகம் இழைத்துள்ளது.

2006-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் ‘ஈழத்தமிழர்கள் அமைதி நிறைந்த நல்வாழ்வுரிமை பெறுவதற்கு வழி காண உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்படும்’ என தி.மு.க. வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் அவர்கள் செய்தது என்னவோ இதற்கு எதிர்மறையான செயல்களைத் தான். தி.மு.க. அங்கம் வகித்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி 2004 முதல் மத்தியிலே நடைபெற்று வந்தது. இலங்கையில் அமைதியை ஏற்படுத்தும் போர்வையில் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.

2008-ம் ஆண்டு துவக்கத்தில் இலங்கை ராணுவத்தினர் 100 பேருக்கு அரியானா மாநிலத்தில் இந்திய ராணுவம் ரகசியமான முறையில் போர் பயிற்சி அளித்ததாகவும், இலங்கை ராணுவத்தினருக்கு அதிநவீன ரேடார் கருவிகள் மற்றும் பல்வேறு வகையான ஆயுதங்களை இந்திய அரசு வழங்கியதாகவும், இந்திய ராணுவத்தின் மூத்த அதிகாரிகள் சிலர் இலங்கை சென்று வந்ததாகவும் அப்போது ஊடகங்களில் செய்திகள் வந்தன. இவை அனைத்தும் மத்திய அரசில் அங்கம் வகித்த தி.மு.க.விற்கு நன்கு தெரியும். இருப்பினும், கருணாநிதி இதனை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்தியாவிடமிருந்து ராணுவ உதவிகளை பெற்றுக்கொண்ட இலங்கை, 2008-ம் ஆண்டு இறுதியிலும், 2009-ம் ஆண்டு துவக்கத்திலும் இலங்கை தமிழர்களை கடுமையாக தாக்க ஆரம்பித்தது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த இலங்கை அரசுக்கு மத்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும், இதற்கு காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு செவி சாய்க்கவில்லை எனில், மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவினை தி.மு.க. விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் நான் அப்போது பலமுறை வற்புறுத்தினேன். ஆனால் இதை செய்வதற்கு மனம் இல்லாமல் எந்த நடவடிக்கையையும் கருணாநிதி எடுக்கவில்லை.

மக்களை ஏமாற்றும் விதமாக ‘‘அனைத்துக்கட்சி கூட்டம்’’, ‘‘சட்டமன்ற கட்சித்தலைவர்கள் கூட்டம்’’, ‘‘தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தீர்மானம்’’, ‘‘மனித சங்கிலி போராட்டம்’’, ‘‘பிரதமருக்கு தந்தி’’, ‘‘நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா’’ என்ற வெற்று அறிவிப்புகளுடன் ராஜினாமா கடிதங்களை தானே பெற்று வைத்துக்கொண்டது; ‘‘இறுதி எச்சரிக்கை’’ என்ற அறிவிப்பு என பல்வேறு நாடகங்களை நடத்தி, இறுதி நாடகமாக ‘‘போர் நிறுத்தம் ஏற்படும் வரை உண்ணாவிரதம்’’ என்று அறிவித்து கடற்கரையில் 3 மணி நேரத்திற்கும் குறைவாக படுத்துக்கொண்டு உண்ணாவிரத நாடகத்தை முடித்துக்கொண்டார்.

அவ்வாறு முடிக்கும்போது, ‘‘விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை இலங்கை அரசு முடித்துக்கொண்டு விட்டது’’ என்ற செய்தியை ஊடகங்களுக்கு தெரிவித்தார் கருணாநிதி.

போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டது என்று இவரது பேச்சை கேட்டு பதுங்கு குழிகளில் பதுங்கியிருந்த அப்பாவி இலங்கைத் தமிழர்கள் வெளியே வந்தனர். இலங்கை ராணுவம் அவர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்தது.

உயிர் பிழைத்த தமிழர்கள் எவ்வித வசதியும் இல்லாமல் ராணுவ முகாம்களில் கம்பி வேலிகளுக்கு பின்னால் அடைத்து வைக்கப்பட்டனர். தமிழர் பகுதிகளில் சிங்களர் குடியேற்றம் திட்டமிட்டு நடைபெற்றது. ஆனால் அப்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் கருணாநிதியின் மகள் கனிமொழி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கைக்கு சென்று, அப்போதைய இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் விருந்துண்டு பரிசுப் பொருட்களை பெற்றுக்கொண்டு இந்தியா திரும்பி, இலங்கை தமிழர்கள் எல்லோரும் நலமாக இருக்கிறார்கள் என ஒரு பொய்யான தகவலை வெளியிட்டனர்.

சில மாதங்களுக்கு முன் இலங்கை வடக்கு மாகாண கவுன்சில் உறுப்பினரான அனந்தி சசிதரன் இறுதிப்போர் உச்சகட்டத்தில் இருந்த 2009-ம் ஆண்டு மே 16-ந்தேதி இரவு கருணாநிதியின் மகள் கனிமொழியிடம், தனது கணவர் சசிதரன் சேட்டிலைட் போனில் பேசியதாகவும், அப்போது கனிமொழி, அவர்களை சரணடைந்து விடும்படியும், அவர்களது விடுதலைக்கு தாங்கள் உத்தரவாதம் தருவதாகவும் சர்வதேச அளவில் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் கூறியுள்ளார்.

அதை நம்பியே சரணடைந்த ஈழத்தமிழர்கள் பலரும் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போய் விட்டனர் என்ற மிகப் பெரும் குற்றச்சாட்டை அவர் கூறியுள்ளார். இங்குள்ள தமிழருக்கு மட்டுமல்லாமல் இலங்கை தமிழருக்கும் இவ்வாறு துரோகம் இழைத்தவர் தான் கருணாநிதி.

தி.மு.க.வும், காங்கிரசும் சேர்ந்து இலங்கை தமிழர்கள் அழிவுக்கு காரணமாக இருந்து விட்டு, பின்னர் ஏற்பட்ட ஏதோ பிரச்சினையால் கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் மத்திய அமைச்சரவையில் இருந்தும், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்தும் விலகி மத்திய அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுக் கொண்ட கருணாநிதி, ‘‘ஈழத் தமிழருக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய ஆட்சியில் தி.மு.க. நீடிப்பது தமிழ் இனத்திற்கே இழைக்கப்படும் பெரும் தீமை’’ என்று கூறினார்.

காங்கிசுடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்றும், ‘‘கூடா நட்பு கேடில் முடியும்’’ என்றெல்லாம் பேசி காங்கிரசில் இருந்து பிரிந்த கருணாநிதி, தனது மகள் கனிமொழி மாநிலங்களவையின் உறுப்பினர் ஆக வேண்டும் என்பதற்காக காங்கிரசின் ஆதரவை கேட்டுப் பெற்றவர் தான்.

பின்னர் நாடாளுமன்ற தேர்தலின் போது தனக்கு பயன்பட மாட்டார்கள் என்பதால் காங்கிரசை வெட்டி விட்டவர் தான் கருணாநிதி. தற்போது காங்கிரசுடன் மீண்டும் கூட்டணி வைத்திருக்கிறார் கருணாநிதி என்றால், 2013-ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேறியது வேறு காரணங்களுக்காகத் தானே? இது போன்ற கபட நாடகங்களை எல்லாம் நடத்தி மக்களை ஏமாற்றி விடலாம் என கருணாநிதி நினைத்தால் அது ஒருபோதும் நிறைவேறாது.

முந்தைய மத்திய காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்த போதே, ஈழத்தமிழர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு துணை போன கருணாநிதி, இப்போதைய தேர்தல் அறிக்கையில் சர்வதேச விசாரணையை மேற்கொள்ள இந்திய அரசு உலக நாடுகளை வலியுறுத்தி செயல்படுத்த வேண்டுமென தி.மு.க. மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்தும் என்று கூறியிருப்பதை நம்புவதற்கு தமிழர்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல.

இவ்வாறு ஜெயலலிதா பேசினார்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top