ஒவ்வொரு முறையும் ஏமாறும்போது இப்படியே கடைசி வரையில ஏமாற்றிவிடுவார்களோ என எண்ண நினைக்கிறது – அற்புதம் அம்மா

putham-Ammal-Perarivalan_ராஜிவ் வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு அதிகாரமில்லை என்று மத்திய அரசு மீண்டும் அறிவித்துள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்படி ஒவ்வொரு முறையும் ஏமாற்றப்படுவதால் நம்பிக்கை இழக்கிறோம் என்று 7 தமிழரில் ஒருவரான பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். ராஜிவ் காந்தி  வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரையும் மாநில அரசு தமக்கான அதிகாரத்தின் அடிப்படையில் விடுதலை செய்யலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. இதனடிப்படையில் தமிழக அரசும் ஏழு தமிழரையும் விடுதலை செய்ய முடிவு செய்தது.

மேலும் இது குறித்து மத்திய அரசின் கருத்தையும் கோரி கடிதம் அனுப்பியிருந்தது தமிழக அரசு. இதற்கு பதிலளித்துள்ள மத்திய அரசு, இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; இந்த 7 தமிழரையும் விடுதலை செய்யும் அதிகாரம் தமிழக அரசுக்கு இல்லை எனக் கூறிவிட்டது. இந்நிலையில் தமிழக அரசு தமக்கான மாநில அரசின் அதிகாரம் உள்ள அரசியல் சாசனம் 161-வது பிரிவின் கீழ் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

செய்தியாளர்களிடம் பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் கூறியதாவது:  இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட அறிவு வந்துடுவான்னு நம்பினேன். இப்படி நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வழக்கமாகப் போய்விட்டது. இப்பவும் முதல்வரைத்தான் நம்பி இருக்கோம். தேர்தலை எதிர்கொள்வதற்கு முன்னதாக 7 பேரையும் விடுதலை செய்வார் என நம்பினோம். அவர் பிரசாரத்தைத் தொடங்கியதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த வழக்கைப் பொறுத்தவரையில் இப்போதும் முதல்வர் நடவடிக்கை எடுக்கலாம். இது தேர்தல் விதிமுறை மீறல் இல்லை. பெரிய மகள் வீட்டுல பேரறிவாளன் அப்பா உடல் நலமில்லாமல் படுக்கையாக இருக்கிறார். அவர் நம்பிக்கை இழந்துட்டார். ஒவ்வொரு முறையும் ஏமாறும்போது இப்படியே கடைசி வரையில ஏமாற்றிவிடுவார்களோ என எண்ண நினைக்கிறது. நாங்கள் இறந்த பின்னால் இறுதி வாழ்க்கையை பேரறிவாளன் நிம்மதியாக வாழ முடியுமா?   இவ்வாறு அற்புதம் அம்மாள் கூறினார்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top