ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப்பை எளிதில் தோற்கடித்து கொல்கத்தா அணி 3-வது வெற்றியை சுவைத்தது.

PL-In-cricketPunjab-defeatedKolkata-team-3rd-win_SECVPF9-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டித் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் தலா 2 முறை மோத வேண்டும். லீக் முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் மொகாலியில் நேற்றிரவு அரங்கேறிய 13-வது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்பும், கொல்கத்தா நைட் ரைடர்சும் பலப்பரீட்சை நடத்தின.

டாஸ் ஜெயித்த கொல்கத்தா கேப்டன் கம்பீர் முதலில் பஞ்சாப்பை பேட் செய்ய பணித்தார். இதன்படி பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மனன் வோராவும், முரளிவிஜயும் இறங்கினர். புனேக்கு எதிரான ஆட்டத்தை போன்று இவர்களால் இந்த முறை வலுவான தொடக்கம் அமைத்து கொடுக்க முடியவில்லை. மனன் வோரா 8 ரன்னிலும், விஜய் 26 ரன்னிலும் வெளியேறினர்.

இதன் பின்னர் பஞ்சாப்பின் விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. ஆடுகளத்தன்மை மெதுவாக இருந்ததால் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர். கொல்கத்தா கேப்டன் கம்பீர், 4 சுழற்பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி எதிரணியின் ரன்வேகத்தை முடக்கினார். விருத்திமான் சஹா (8 ரன்), மேக்ஸ்வெல் (4 ரன்), கேப்டன் டேவிட் மில்லர் (6 ரன்), அக்ஷர் பட்டேல் (9 ரன்) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இரட்டை இலக்கை தொட முடியாமல் நடையை கட்டினர்.

இந்த வீழ்ச்சிக்கு மத்தியில் 2-வது விக்கெட்டுக்கு இறங்கிய ஷான் மார்ஷ் மட்டும் நிலைத்து நின்று போராடினார். இதனால் பஞ்சாப் அணி ஓரளவு கவுரவமான நிலைக்கு வந்தது. ஆந்த்ரே ரஸ்செல் வீசிய கடைசி ஓவர் மட்டுமே பஞ்சாப்புக்கு கொஞ்சம் மகிழ்ச்சிகரமாக இருந்தது. அந்த ஓவரில் 2 சிக்சர் உள்பட பஞ்சாப் வீரர்கள் 18 ரன்கள் சேகரித்தனர். ஷான் மார்ஷ், சிக்சர் அடித்து கொல்கத்தா அணிக்கு எதிராக தனது முதலாவது அரைசதத்தை பூர்த்தி செய்தார்.

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 8 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் சேர்த்தது. ஷான் மார்ஷ் 56 ரன்களுடனும் (41 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்), கைல் அப்போட் 12 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

கொல்கத்தா தரப்பில் சுனில் நரின், மோர்னே மோர்கல் தலா 2 விக்கெட்டுகளும், உமேஷ் யாதவ், யூசுப் பதான், பியுஷ் சாவ்லா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

அடுத்து 139 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி கொல்கத்தா அணி வீரர்கள் ராபின் உத்தப்பாவும், கேப்டன் கவுதம் கம்பீரும் களம் புகுந்தனர். பவுண்டரியுடன் அணியின் ரன் கணக்கை தொடங்கிய உத்தப்பா, தொடர்ந்து அதிரடி காட்டினார். இதனால் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்தது. ‘பவர்-பிளே’யான முதல் 6 ஓவர்களில் கொல்கத்தா அணி 65 ரன்கள் குவித்தது. இந்த சீசனில் பவர்-பிளேயில் ஒரு அணி எடுத்த அதிகபட்ச ரன்கள் இது தான்.

அபாரமாக ஆடி அரைசதத்தை கடந்த உத்தப்பா 53 ரன்களில் (28 பந்து, 9 பவுண்டரி) எல்.பி.டபிள்யூ. ஆனார். கம்பீர் தனது பங்குக்கு 34 ரன்கள் (34 பந்து, 3 பவுண்டரி) எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் பின்னர் மனிஷ்பாண்டே (12 ரன்), ஷகிப் அல்- ஹசன் (11 ரன்) ஆகியோரின் வெளியேற்றத்தால் லேசான தடுமாற்றத்தை சந்தித்து பிறகு வெற்றிக்கனியை பறித்தது.

கொல்கத்தா அணி 17.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 141 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சூர்யகுமார் 11 ரன்னுடனும், யூசுப் பதான் 12 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

4-வது ஆட்டத்தில் ஆடிய கொல்கத்தா அணிக்கு இது 3-வது வெற்றியாகும். ஏற்கனவே டெல்லி, ஐதராபாத் அணிகளையும் சாய்த்து இருந்தது. இதன் மூலம் புள்ளி பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது. பஞ்சாப் அணிக்கு இது 3-வது தோல்வியாகும்.


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top