குஜராத்தில் மீண்டும் வெடித்தது போராட்டம்: முழு அடைப்பு, பாதுகாப்புக்கு துணை ராணுவம் குவிப்பு!

c1குஜராத் மாநிலத்தில் போலீசாரை கண்டித்து இன்று (திங்கட்கிழமை) முழு அடைப்பு போராட்டத்திற்கு பட்டேல் இனத்தவர் அழைப்பு விடுத்துள்ளதால், பாதுகாப்புக்கு போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டு உள்ளனர்.

தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்து கல்வி, வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என,  குஜராத்தில் கணிசமாக வாழ்ந்து வரும் பட்டேல் சமூகத்தினர், கடந்த சில மாதங்களாக போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தை தலைமையேற்று நடத்திய ஹர்திக் பட்டேல் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு, அவருடன் பலர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், அவர்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், இடஒதுக்கீடு கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி சர்தார் பட்டேல் இனத்தவர்கள், நேற்று வடக்கு குஜராத் நகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தினர். இதற்கு போலீசார் அனுமதி அளிக்காததால், போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் போலீஸ் வாகனங்கள் தீவைத்து கொளுத்தப்பட்டன. போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். போலீசாரும் பதிலுக்கு தடியடி நடத்தினர். இதில் போலீசார் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் வன்முறையில் ஈடுபட்ட 500 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும், பட்டேல் இனத்தவர்கள் அதிகமாக வசிக்கும் ஆமதாபாத், சூரத் மற்றும் வடக்கு குஜராத் நகரங்களில், பாதுகாப்பு பணிகளுக்காக துணை ராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த பகுதிகளில் இணையதளம் மற்றும் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.

இதற்கிடையே, போலீசாரை கண்டித்து இன்று குஜராத் மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு பட்டேல் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆமதாபாத், மெக்சானா, சூரத் மற்றும் பிற பகுதிகளில் அதிரடி படை துணை ராணுவம் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

 

 


கருத்துக்களை பகிர


அல்லது

Your email address will not be published.

Scroll To Top